ஈரானில் 300 பில்லியன் டொலர் முதலீடு... இறுதிகட்ட ஒப்பந்தத்தை நெருங்கும் அமெரிக்கா
மத்திய கிழக்கில் நிலவும் போரை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஓர் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, கடந்த பல வாரங்களாக உழைத்து வருகின்றனர்.
உடன்பாடு எட்டியுள்ளதாக
தற்போது, இரு தரப்பினரும் தங்கள் நிலையற்ற போர்நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீது இறுதியாக உடன்பாடு எட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், போர்நிறுத்த நீட்டிப்பிற்கான வரைவு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அந்த ஒப்பந்தத்தில் உட்படுத்தப்பட்டுள்ள விவரங்கல் தொடர்பில் தகவல் கசிந்துள்ளது.
Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஹார்முஸ் வழியாக கப்பல் போக்குவரத்து எந்தவித சுங்கக் கட்டணமோ அல்லது தொந்தரவோ இன்றி தடையின்றி நடைபெற வேண்டும்; ஈரான் 30 நாட்களுக்குள் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்ற வேண்டும், மேலும் வணிகப் போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை விலக்கிக்கொள்ளும்.
மட்டுமின்றி, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் எதிர்காலம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் உறுதியளிப்பதும், அணு ஆயுதங்களை உருவாக்க முயலப்போவதில்லை என்று ஈரான் உறுதியளிப்பதும் அடங்கிய ஓர் உறுதிமொழியும் ஏற்க உள்ளனர்.
60 நாட்கள் போர் நிறுத்தத்தின்போது இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள முதல் விவகாரங்கள், ஈரானிடம் உள்ள சுமார் 970 பவுண்டு யுரேனியம் இருப்பை அகற்றுவதும், ஈரானின் செறிவூட்டல் செயல்முறைக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பும் ஆகும்.

பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, தடைகளைத் தளர்த்துவது மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கவும் அமெரிக்கா உறுதியளிக்கும்.
300 பில்லியன் டொலர்
ஈரான் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறத் தொடங்குவதற்கு உதவும் ஒரு வழிமுறையையும் இரு தரப்பினரும் விவாதிப்பார்கள். ஈரானுக்குச் சொந்தமான சுமார் 24 பில்லியன் டொலர் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது; மேலும், அந்தச் சொத்துக்களில் இருந்து 20 பில்லியன் டொலர் வரையிலான தொகையை அணுக அந்த நாடு விரும்புகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள மிகவும் ஆச்சரியமான அம்சம், ஈரானுக்கான ஒரு முதலீட்டு நிதியம் பற்றிய குறிப்பு என்றே கூறுகின்றனர். கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், 300 பில்லியன் டொலர் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தை அமைக்க அமெரிக்கா ஒப்புக்கொள்ளும். இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், அந்தப் பணம் ஈரானுக்கு வழங்கப்படும் என ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வரைவு குறித்து விளக்கமளிக்கப்பட்ட அமெரிக்கத் தூதர்கள், அதனை ஒரு சர்வதேச முதலீட்டு நிதியம் என்று குறிப்பிட்டதாகவும், இறுதி ஒப்பந்தம் ஏற்படும் பட்சத்தில் அதனை எளிதாக்க அமெரிக்கா உதவும் என்றும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முக்கிய எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள், முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சி ஒப்பந்தங்களுக்காக ஈரானில் நுழையலாம் என்று ஈரானியர்கள் முன்மொழிந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |