மெக்சிகோ, மத்திய அமெரிக்காவில் இராணுவ நடவடிக்கை: வான்வழி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் வான்பரப்பை பயன்படுத்தும் வணிக விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வான்வழி எச்சரிக்கை
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் உள்ள வான்பரப்பை பயன்படுத்தும் வணிக விமானங்களுக்கு அமெரிக்காவின் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து ஆணையம்(FAA) எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.
வெள்ளிக்கிழமை இது தொடர்பாக FAA வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிடப்பட்ட பகுதிகளில் பிராந்திய பதற்றம் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் நிலவுவதால் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து விமான நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நடைமுறைகள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், அடுத்த 60 நாட்களுக்கு இவை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையின் முக்கிய அம்சம்
FAA வெளியிட்ட அறிவிப்பில் மிக முக்கியமானதாக, உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பில்(GNSS) பாதிப்புகள் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விமானிகளின் GPS மற்றும் இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்பம் செயல்படாமல் நிலைமை மோசமடையலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பொகோட்டா மற்றும் குயாகுவில், கடல்சார் பகுதிகளில் மசாட்லான் ஓசியானிக் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் வான்பகுதி ஆகியவை பாதிக்கக்கூடிய பகுதிகளாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |