டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து
US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்காவின் Federal District Court, Manhattan நீதிபதி Jeannette Vargas, டிரம்ப் நிர்வாகம் விதித்த 75 நாடுகளுக்கான புலம்பெயர்ந்தோர் விசா தடை, சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளார்.

இந்த தடை, 2026 ஜனவரியில் அமுல்படுத்தப்பட்டது. உலகின் சுமார் 40 சதவீத நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கான விசாக்கள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டன.
இதில் பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஹைட்டி, சோமாலியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடங்கும்.
அந்த நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் அரசு நலத்திட்டங்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என காரணம் கூறப்பட்டது.
ஆனால், சட்டப்படி, ஒருவரை “Public Charge” (அரசு உதவியை சார்ந்தவர்) என நிராகரிக்க, அவரின் நிதிநிலை, வயது, உடல்நலம், திறமைகள், குடும்ப சூழல் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும். நாட்டின் அடிப்படையில் பொதுவாக நிராகரிப்பது சட்டத்திற்கு முரணானது என நீதிபதி தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் விண்ணப்பதாரர்கள் தங்கள் நிதி நிலையை நிரூபித்தாலும், “விசா மறுக்கப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், குடும்ப இணைப்பு மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையிலான நிரந்தர குடியேற்ற விசாக்கள் பாதிக்கப்பட்டன.
இந்த தடை, 1965-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டத்திற்கும் முரணானது என நீதிபதி கூறினார்.
வழக்கு தொடர்ந்தவர்கள், அமெரிக்க குடிமக்கள். இவர்களின் கானா, ஜமைக்கா, குவாத்தமாலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள உறவுகள் விசா மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், கொலம்பியாவிலிருந்து வேலை அடிப்படையிலான விண்ணப்பதாரர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைக்கு பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. நிர்வாகம் இதற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |