டசின் கணக்கான விமானங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்... ஈரானால் அமெரிக்கா இழந்தவை
US loss to Iran attacks revealed: ஈரான் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 30 MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோன்கள் உட்பட டசின் கணக்கான விமானங்களை அமெரிக்கா இழந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சந்தித்த இழப்புகள்
மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை பென்டகனின் கண்காணிப்பு அமைப்பு ஒன்றே உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பாதுகாப்புத் துறை தலைமை ஆய்வாளரால் திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரை போரில் அமெரிக்கா சந்தித்த இழப்புகள் குறித்த முதல் உத்தியோகப்பூர்வ விவரங்கள் அடங்கியுள்ளது.
இந்த அறிக்கையில், தற்போது அமெரிக்கா எதிர்கொள்ளும் ஆயுதப் பற்றாக்குறை தொடர்பில் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறந்த மற்றும் உயர்தர ஆயுதங்களை தயாரித்து வருவதாக திங்களன்று ட்ரம்ப் கூறினார்.
முன்பு, அமெரிக்க ஊடகங்கள் ஆயுதத் தட்டுப்பாடு குறித்துத் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளதாக அவர் அழுத்தமாகக் கூறியிருந்தார்.
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய இப்போரின்போது, வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துகள் மீது ஈரான் தொடர்ந்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது.
அத்தகைய தாக்குதல்களில் பெரும்பாலானவற்றை, இடைமறித்து முறியடித்துவிட்டதாக வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் தெரிவித்தன. ஆனால், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கும் அதன் தளங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதமும் இழப்பும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலானவை என்றும், இது முன்பு ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மிக அதிகம் என்றும் பென்டகனின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஈரான் மீதானப் போருக்கு முன்னர் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, எந்த நாட்டினரின் கப்பலும் கடந்து சென்றுகொண்டிருந்த ஹார்முஸ் நீரிணை தொடர்பில் தற்போது ஈரானும் அமெரிக்காவும் மோதத் தொடங்கியுள்ளன.
417 அமெரிக்க ராணுவத்தினர்
போரின்போது குறைந்தது 11 அமெரிக்க ராணுவத்தினர் போர்க்கள நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாகவும், அதேவேளையில் ஏழு பேர் போர்ச் சூழல் சாராத நிகழ்வுகளில் மரணமடைந்ததாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாய அறிக்கையில், ஜூன் 30-ஆம் திகதி வரை ஈரானியத் தாக்குதல்களில் குறைந்தது 417 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா இழந்தவற்றில், முன்னணிக் களப் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் முதல், வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் ஹெலிகொப்டர்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் வரை அனைத்தும் அடங்கும்.
அத்துடன், ஹார்முஸ் நீரிணைக்கு அருகே கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களைப் பலமுறை சுட்டு வீழ்த்தியதன் மூலம், அமெரிக்காவின் சொத்துக்களுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் 'டைவ்-எல்டி' (Dive-LD) எனும் நீர்மூழ்கிக் கருவியையும் ஈரான் கைப்பற்றியது. ஈரானியத் தாக்குதல்களால் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் கட்டமைப்புகளும் சேதமடைந்தன மற்றும் அழிக்கப்பட்டன.
மேலும், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகங்கள் ஈரானியத் தாக்குதல்களால் சேதமடைந்ததாகவும், அதன் மொத்தச் செலவு சுமார் 184 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பாக்தாத், ஜெருசலேம், டெல் அவிவ், கெய்ரோ, அம்மான், குவைத் நகரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, கட்டுமானத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்களால் அமெரிக்காவுக்கு மாதத்திற்கு சுமார் 24.5 மில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது.

ஜூன் மாத இறுதி வரை ஈராக் பணிக்கான நடவடிக்கை 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், இதனால் சுமார் 157 மில்லியன் டொலர் வரை செலவு ஏற்பட்டதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை கூறியதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அந்த வளாகம் சேதமடைந்துள்ளதாகவும், அதன் சேத மதிப்பு 14.75 மில்லியன் டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 3 அன்று, இரண்டு ஈரானிய ட்ரோன்கள் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கியதில், சுமார் 11.5 மில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.
துபாயில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பயன்பாட்டுக் கட்டடம் ஒன்று சேதமடைந்ததாகவும், அதனால் சுமார் 1,20,000 டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.