அமெரிக்க இளைஞரை காணொலி மூலம் திருமணம் செய்யும் தமிழ் பெண்: நீதிமன்றம் சிறப்பு உத்தரவு!
அமெரிக்க குடியுரிமை பெற்ற இளைஞரை காணொலி மூலம் திருமணம் செய்து கொள்ள தமிழக பெண்ணுக்கு மதுரை கிளை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வம்சி சுதர்ஷினி மற்றும் ராகுல் எல் மது இருவரும் தங்களது நீண்ட நாள் நட்பிற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அவர்களது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து இருந்த நிலையில், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் இந்தியாவை சேர்ந்த ராகுல் அமெரிக்காவில் வசித்து வருவதாலும், தற்போது அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார் என்ற காரணங்களாலும், தம்பதியினரின் திருமண விண்ணப்பம் குறித்து முடிவு எடுக்க 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என பதிவு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
30 நாட்கள் இருவரும் காத்திருந்த போதும் எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்காத நிலையில், ராகுல் தனது விடுமுறையை நீட்டிக்க வழியின்றி அமெரிக்க சென்றுவிட்டார்.
இந்தநிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற இளைஞருடன் காணொலி மூலம் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்குமாறு கன்னியாகுமரியை மாவட்டத்தை சேர்ந்த வம்சி சுதர்ஷினி தொடர்ந்த வழக்குக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுத் தொடர்பாக நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில், திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை, மனுதாரர்கள் தங்களின் திருமணத்தை நடத்த ஆன்லைன் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
எனவே அவர்களின் திருமணத்தை காணொலி வழியாக நடத்த அனுமதிப்படுகிறது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: வாஷிங் மெஷினுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன்: அமெரிக்காவில் பரபரப்பு!
மேலும் மூன்று சாட்சிகள் முன்னிலையில் மனுதாரர் தன் தரப்பிலும் ராகுல் தரப்பிலும் திருமண பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம், அதனடிப்படையில் திருமண பதிவு சான்றிதழையும் மணவளக்குறிச்சி சார்பதிவாளர் வழங்க வேண்டும் என நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.