ஹார்முஸில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை உதவும்: ட்ரம்ப் அறிவிப்பு
ஈரான் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா உதவியுடன் வெளியேற்றப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பாக வெளியேற்ற
ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப்,

அவர்களுடைய கப்பல்களையும் மாலுமிக் குழுவினரையும் நீரிணையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று அவர்களுக்குத் தெரிவிக்குமாறு பிரதிநிதிகளிடம் கூறியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வளைகுடாவில் சிக்கியுள்ள 850-க்கும் மேற்பட்ட கப்பல்கள் எவ்வாறு விடுவிக்கப்படும் என்பது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் எந்த விவரங்களையும் அளிக்கவில்லை.
இதனிடையே, தற்போது அந்தத் திட்டத்தில், அமெரிக்கக் கடற்படைப் போர்க்கப்பல்கள் நீரிணை வழியாகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்துச் செல்வது இடம்பெறவில்லை என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த மீறலாக
மாறாக, இது கப்பல் போக்குவரத்துத் துறையினர் நீரிணை வழியாகப் போக்குவரத்தை ஒருங்கிணைக்க உதவும் ஒரு செயல்முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ட்ரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணையில் தலையிட அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும், ஈரானால் போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும் என மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுடன் போர் தொடங்கிய உடனேயே, ஈரான் ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் வெளிநாட்டுக் கப்பல் போக்குவரத்திற்கு முற்றுகையை விதித்தது.
இதனையடுத்து, ஏப்ரல் 13 அன்று, ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ட்ரம்ப் எதிர் முற்றுகையை விதித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |