அமெரிக்காவில் இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயர முடிவு
வாழ்கைத்தரத்தை சற்றே உயர்த்திக்கொள்ளலாம் என்னும் ஆசையில் அமெரிக்கா சென்ற இந்தியக் குடும்பம் ஒன்று, தீவிபத்தொன்றில் பலியானதைக் குறித்த துயரச் செய்தி ஒன்று வெளியாகி, சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
தீவிபத்தில் சிக்கி பலியான இந்தியக் குடும்பம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தேஷ்பாய் சுதார், அவரது மனைவியான ஹினாபென் சுதார் மற்றும் தம்பதியரின் மகளான இஷானி (20) ஆகியோர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.

Ohio மாகாணத்திலுள்ள Wooster என்னுமிடத்தில் மோட்டல் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார் ஹித்தேஷ்பாய்.
அவரது மனைவியான ஹினாபென் அருகிலுள்ள மோட்டல் ஒன்றில் வேலை செய்ய, மகள் இஷானி தெருவுக்கு மறுபக்கம் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.
மூவரும், ஹித்தேஷ்பாய் வேலை செய்துவந்த மோட்டலின் ஒரு அறையிலேயே தங்கியிருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நள்ளிரவு 1.30 மணியளவில் ஹித்தேஷ்பாய் குடும்பம் தங்கியிருந்த மொட்டலில் தீப்பிடித்துள்ளது.
தீ சூழ்ந்துகொண்டதால், அவர்களால் அறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை உருவாகியுள்ளது. தீ வேகமாக பரவ, ஹித்தேஷ்பாய் ரிஷப்ஷனுக்கு போன் செய்து உதவி கோரியுள்ளார்.
உடனே, குளியலறைக்குள் சென்று, தண்ணீர்க்குழாயைத் திறந்துவைத்துவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதேபோல, ஹித்தேஷ்பாய் குடும்பம் உதவி வரும் என நம்பிக்கொண்டு குளியலறைக்குள் காத்திருந்துள்ளது.
ஆனால், தீயணைப்பு வீரர்கள் அந்த மோட்டலுக்கு வரும்போது, தீ முற்றிலுமாக பரவிவிட, 70 தீயணைப்புவீரர்கள் போராடி தீயை அணைத்தும், ஹித்தேஷ்பாய் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
சற்றே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்னும் ஆசையில் சொந்த நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற அந்த மொத்தக் குடும்பமும், அந்த தீவிபத்தால் பலியாகிவிட்ட விடயம் கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |