இலங்கைக்கு ஈரானிய வீரர்கள் தொடர்பில் அமெரிக்காவின் கடும் அழுத்தம்
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் வழியில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்து தப்பியவர்களை தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தமளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அழுத்தம்
அத்துடன், இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலின் ஊழியர்களுக்கும் அனுமதி மறுக்க அமெரிக்கா அழுத்தமளிப்பதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையின் தெற்கு துறைமுக நகரமான காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை மூழ்கடித்தது.
இதில் டசின் கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், வியாழக்கிழமை, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆனால் அதன் கடல் எல்லைக்கு வெளியே சிக்கித் தவித்த இரண்டாவது ஈரானிய கடற்படை துணைக் கப்பலான IRIS Booshehr இலிருந்து 208 வீரர்களை இலங்கை மீட்கத் தொடங்கியது.
இது மனிதாபிமான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விளக்கமளித்திருந்தார். IRIS Dena போர்க்கப்பலை டார்பிடோவால் தாக்கியது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் முதல் நடவடிக்கை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் ஜெய்ன் ஹோவெல் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிக்கையில், Booshehr குழுவினரையோ அல்லது Dena கப்பலில் உயிர் பிழைத்த 32 பேரையோ இலங்கை அரசாங்கம் ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
திட்டம் எதுவும் இல்லை
அவர்களை ஈரான் நிர்வாகம் அமெரிக்காவிற்கு எதிரான பரப்புரைகளுக்கு பயன்படுத்தக் கூடும் என்றும் மார்ச் 6 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ள ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரிடம், ஈரானிய குழுவினரை தாயகம் திருப்பி அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ஹோவெல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் வங்காள விரிகுடாவில் இந்தியா ஏற்பாடு செய்த கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ள IRIS Dena போர்க்கப்பல் ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்க டார்பிடோவால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |