முதல் முறையாக... அமெரிக்கா, ரஷ்யாவுடன் உக்ரைனும் ரகசிய பேச்சுவார்த்தை
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்கா, ரஷ்யாவுடன் உக்ரைனும் அபுதாபியில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான உற்பத்தி ஆலை
ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல், செவ்வாயன்று உக்ரைனின் இராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடனோவுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் மிகப்பெரிய விமான உற்பத்தி ஆலை ஒன்றை உக்ரைன் உக்கிரமாகத் தாக்கியதன் பின்னணியிலேயே, இந்த உயர்மட்டக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் ரஷ்யாவின் லேசர் ஆயுதங்களுக்கான விமானம் A-60 மொத்தமாக தீக்கிரையாகியுள்ளது. கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, ஒரே இரவில் 249 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருங்கடலுக்கு மேல் 116 ட்ரோன்களும், கிராஸ்னோடர் மற்றும் ரோஸ்டோவின் தெற்குப் பகுதிகளுக்கு மேல் 92 ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டன.
உக்ரைனின் ஒடேசா பகுதியைத் தாக்கும் ரஷ்ய ட்ரோன்கள் ருமேனிய வான்வெளியில் பறந்த நிலையிலேயே ரஷ்யாவின் டாகன்ரோ பகுதி மீதான தாக்குதல் நடந்தது.

பேச்சுவார்த்தை என முடிவு
இதனிடையே, ஐரோப்பாவின் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என புடின் மறுத்த நிலையில், உக்ரைன் தலைநகர் மீது மிகக் கொடூரமானத் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது.
அண்டை நாடான ருமேனியாவும் ரஷ்ய ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது. இந்த நிலையிலேயே, ஜெனீவாவில் அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அபுதாபியில் அமைதி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை என்ற முடிவை எடுத்தனர்.

டிரிஸ்கோலும் ரஷ்ய தரப்பும் திங்கள்கிழமை இரவு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். விரைவில் உக்ரைனின் புடனோவை டிரிஸ்கோல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவால் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவர் இந்த கைரிலோ புடனோவ். வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |