வெளிநாட்டு ஜனாதிபதிக்கு எதிராக தடைகள் விதித்த அமெரிக்கா
கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
வலுவான நடவடிக்கை
தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பெட்ரோ போதைப்பொருள் குழுக்களை செழிக்க அனுமதித்து, தீவிர நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டைப் பாதுகாக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலுவான நடவடிக்கை எடுத்து வருகிறார்,
மேலும் நமது நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தலை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோவிற்கும் ட்ரம்பிற்கும் இடையே வளர்ந்து வரும் சச்சரவின் மத்தியில் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் படகுகள் என குற்றஞ்சாட்டி தாக்குதல் முன்னெடுக்கும் ட்ரம்ப், சர்வதேச சட்டத்தை மீறுவதுடன் சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகளை நிறைவேற்றுவதாகக் கொலம்பியாவின் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
நிறுத்த வேண்டும்
வெளியான தகவலின் அடிப்படையில், இரண்டு மாதங்களுக்குள் அமெரிக்கா 10 படகுகளை அழித்து குறைந்தது 43 பேரைக் கொன்றுள்ளது. சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கொலம்பியா கோரியுள்ளது.

ஆனால், கொலம்பியாவிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் உதவியை நிறுத்துவதாகவும், கொலம்பிய பொருட்களுக்கு வரிகளை விதிப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனிடையே, பெட்ரோவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்கத் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக வந்த செய்திக்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் தாம் ஒருபோதும் அமெரிக்காவிடம் மண்டியிடப் போவதில்லை என பெட்ரோ தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |