ஈரானிடம் வாங்கிய பெட்ரோல்: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது ஏன்?
அமெரிக்க அரசு, ஈரானுடன் பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் அல்லது பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஆறு இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை
உலக அளவில் 20 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடைகள், ஈரான் அரசு தனது வருவாயை மத்திய கிழக்கு மோதல்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் உள்நாட்டு மக்களின் உரிமைகளை ஒடுக்குதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், "ஈரான் அரசு மத்திய கிழக்கில் தொடர்ந்து மோதல்களுக்கு எண்ணெய் ஊற்றி வருகிறது. அதன் நிலையற்ற செயல்பாடுகளுக்கு நிதியளிக்கப் பயன்படும் வருவாய் ஓட்டத்தைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
தடை விதிக்கப்பட்ட 6 இந்திய நிறுவனங்கள்
அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்: ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 84 மில்லியன் டொலருக்கும அதிகமான மதிப்புள்ள ஈரானிய-பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியதாக இந்த நிறுவனம் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்: ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை, மெத்தனால் உட்பட 51 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஈரானியப் பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜுபிட்டர் டை கெம் பிரைவேட் லிமிடெட்: ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை, ஈரானிய-பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளான டொலுயீன் உட்பட 49 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியதாக இந்த நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரம்னிக்லால் எஸ். கோசலியா அண்ட் கம்பெனி: ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை, மெத்தனால் மற்றும் டொலுயீன் உட்பட 22 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஈரானியப் பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது.
பர்சிஸ்டென்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்: அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை, ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட பாப் அல் பர்ஷா (Bab Al Barsha) உட்பட பல நிறுவனங்களிடமிருந்து, சுமார் 14 மில்லியன் டொலர் மதிப்புள்ள மெத்தனால் போன்ற ஈரானிய பெட்ரோகெமிக்கல் பொருட்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கஞ்சன் பாலிமர்ஸ்: தனாய்ஸ் டிரேடிங் (Tanais Trading) என்ற நிறுவனத்திடமிருந்து, 1.3 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பாலிஎதிலீன் உள்ளிட்ட ஈரானிய-பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளை இந்த நிறுவனம் இறக்குமதி செய்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த ஆறு இந்திய நிறுவனங்களும், ஈரானில் இருந்து பெட்ரோகெமிக்கல் பொருட்களை வாங்குதல், விற்பனை செய்தல், போக்குவரத்து அல்லது சந்தைப்படுத்துதலில் "தெரிந்து ஈடுபட்டதற்காக", எக்சிகியூட்டிவ் ஆர்டர் 13846-இன் பிரிவு 3(a)(iii)-இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரத் தடைகளின் விளைவுகள்
இந்தத் தடைகள் இலக்கு வைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
ஒரு நிறுவனம், தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 50% அல்லது அதற்கு மேல் சொந்தமாக இருந்தால், அந்த நிறுவனமும் தானாகவே தடைக்கு உள்ளாகும்.
அமெரிக்க நபர்கள் அல்லது அமெரிக்காவிற்குள் இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனினும், ஒரு குறிப்பிட்ட உரிமத்தின் (license) மூலம் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்று வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |