ஈரானுக்கு உதவும் எண்ணெய் கப்பல்கள்... மரண அடி கொடுத்த அமெரிக்கா
ஈரானிய பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 29 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
தொடர்ந்து முடக்கும்
தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்கள் மற்றும் அதன் நிறுவனங்கள் அனைத்தும் முறைகேடான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தியுள்ளனர் என்று அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள எண்ணெய் நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் கப்பல்களையே shadow fleet என அடையாளப்படுத்துகின்றனர்.
இப்படியான கப்பல்கள் அனைத்தும் காலாவதியானவை, அவைகளின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய முடியாதவை, எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல துறைமுகங்களுக்கும் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான உயர்தர காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுபவை என அதிகாரிகள் தரப்பு பட்டியலிடுகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க கருவூலத் துறை ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தும் பெட்ரோலிய வருவாயைத் தொடர்ந்து முடக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பயங்கரவாதப் பிரதிநிதிகளுக்கு அது அளிக்கும் ஆதரவு ஆகிய காரணங்களுக்காக, ஈரான் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 12 நாட்கள் இஸ்ரேலுடன் நீடித்தப் போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசித் தாக்கிய நிலையில், அதுவரை அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட ஐந்து சுற்று மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்தன. வியாழக்கிழமை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த நடவடிக்கையில் எகிப்து தொழிலதிபர் Hatem Elsaid Farid Ibrahim Sakr என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
பதட்டமான சூழலில்
தடை விதிக்கப்பட்டுள்ள 29 கப்பல்களில் இவரது 7 கப்பல்களும் பல கப்பல் வணிக நிறுவனங்களும் அடங்கும். முன்னதாக, ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதற்காக அமெரிக்காவால் ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு கப்பல் மீது, வெனிசுலா எண்ணெயைக் கொண்டு செல்லும் நிலையில் அமெரிக்கா இந்த மாதம் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஸ்கிப்பர் எனப்படும் ஒரு எண்ணெய் கப்பலை டிசம்பர் 10 அன்று வெனிசுலா கடற்பகுதியில் வைத்து அமெரிக்கா கைப்பற்றியது.

இந்த நடவடிக்கையானது ஏற்கனவே பதட்டமான சூழலில், அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
தொடர்புடைய கப்பலானது அடிசா என்ற பெயரில் செயல்பட்டு வந்தபோது, ஈரானிய எண்ணெயை வர்த்தகம் செய்ததில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த எண்ணெய்க் கப்பல் மீது முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், 2022 ஆம் ஆண்டில் தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |