மீண்டும் ஒரு எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா... இறுகும் போர் பதற்றம்
சர்வதேச கடல் பகுதியில் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே மற்றொரு எண்ணெய் கப்பலைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பாக
வெனிசுலாவிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.
தற்போது இன்னொரு கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக இன்று காலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை கடலோரக் காவல்படை முன்னின்று நடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்,
ஆனால் குறித்த கப்பலானது எங்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா அரசாங்கத்தை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அத்துடன், அந்த நாட்டிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களுக்கு முழுமையான மற்றும் விரிவான முற்றுகை விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகத்தின் வெனிசுலா படகுகளுக்கு எதிரான ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் குழுவினர் என்றே வெள்ளை மாளிகை குறிப்பிடுகிறது.

சொத்துக்களைத் திருடிவிட்டது
மட்டுமின்றி, 1970-களில் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் வயல்களை நாட்டுடைமையாக்கியதன் மூலம் வெனிசுலா அமெரிக்கச் சொத்துக்களைத் திருடிவிட்டது என்று குறிப்பிட்டு, ட்ரம்ப் வெனிசுலாவுக்கு எதிரான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

திருடப்பட்ட இந்த எண்ணெயைப் பயன்படுத்தி போதைப்பொருள் பயங்கரவாதம், மனிதக் கடத்தல், கொலை, ஆட்கடத்தல் மற்றும் சுயலாபம் ஆகியவற்றுக்கு மதுரோ நிதியளிப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீப வாரங்களில், அமெரிக்கா வெனிசுலாவுக்கு அருகில் இயங்கும் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெனிசுலா அருகாமையில் குறைந்தது 11 கப்பல்களும் 15,000 வீரர்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக நவம்பர் மாத இறுதியில், மதுரோவிடம் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாகத் தகவல்கள் வெளியானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |