ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம்
ஸ்பெயின் உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்தி கொள்ள போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி மறுத்த ஸ்பெயின்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து உள்ளது.
அமெரிக்கா, நட்பு நாடுகளின் இராணுவ தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

இதற்கிடையில் ரோட்டா(Rota) மற்றும் மோரான்(Moron) விமானப்படை தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.
தங்கள் எல்லைக்குள் நடக்கும் எந்தவொரு ராணுவ நடவடிக்கைகளுக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டே இருக்கும் என்பதில் ஸ்பெயின் உறுதியாக உள்ளது.
மேலும் தங்கள் விமானப்படை தளங்களை பயன்படுத்தி தற்போதைய போரில் எந்தவொரு நேரடி தாக்குதல்கள் நடத்தவும் அனுமதிக்க முடியாது என்றும் ஸ்பெயின் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் உடனான அனைத்து விதமான வர்த்தக உறவுகளையும் துண்டிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜேர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் உடன் இணைந்த கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த உத்தரவை அறிவித்துள்ளது.
அப்போது, ஸ்பெயினில் உள்ள முக்கியமான ராணுவ தளங்களில் அமெரிக்காவை அணுக விடாமல் தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிடம், ஸ்பெயினுடனான அனைத்து நிதி மற்றும் வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |