ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா... ஜோர்டான் மீது திருப்பியடித்த ஈரான்
US attacked Larak Island to prevent launch of sea mines: கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காக லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா.
ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஒரு தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தியுள்ளது. கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காகவே லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் கடல் கண்ணிவெடிகளை ஏவுவதற்கு இஸ்லாமியப் புரட்சிகரப் படைப் பிரிவினர் (IRGC) தயாராவது தெரிய வந்த நிலையில், தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு ஏவுதளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலில் பல வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும், இதற்கு ஈரான் தரப்பிலிருந்து தண்டனை அளிக்கப்படும் என்றும் IRGC கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, ஜோர்டானில் அமெரிக்காவால் இயக்கப்படும் கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ராக் ஆகிய விமானப்படைத் தளங்களில் இருந்த தொழில்நுட்பக் கட்டமைப்பு, பராமரிப்பு வசதிகள் மற்றும் எதிரி நாட்டு போர் விமானங்களின் நிலைகளை IRGC குறிவைத்தது.
அமெரிக்கா தனது தாக்குதலுக்கான விலையை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா தரப்பில் இருந்து ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாகவும், அமெரிக்காவின் mq-9 ட்ரோன் ஒன்றை ஹார்முஸ் நீரிணை மேலே தாக்கி அழித்ததாகவும் IRGC தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது வந்த அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டுவிட்டதாகவும், இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.

லராக் தீவு மீது தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஈரானின் எரிசக்தி மையமான கார்க் தீவு தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வழக்கம்போல மேலதிக விவரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. ஹார்முஸ் நீரிணையின் சர்வதேசப் பகுதிகளில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டன என்றும்,
புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலோ அல்லது படகோ அழிக்கப்படும் என்று ஈரானிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |