இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க நீர்மூழ்கி ஒன்று நீருக்கடியில் டார்பிடோவைப் பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்துள்ளது.
மிகப்பெரிய சாதனை
குறித்த தகவலை அமெரிக்காவின் போர் செயலாளர் பீட் ஹெக்செத் புதன்கிழமை அறிவித்தார். ஈரான் மீது இராணுவம் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும்,

அமெரிக்கா தற்போதுதான் ஆட்டத்தைத் தொடங்கியதாகவும் ஹெக்செத் கூறிய நிலையில், இந்த உயர் துல்லியத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானுக்கு எதிரானப் போர் தொடங்கிய 100 மணி நேரத்தில் அமெரிக்கா 2,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளது.
மேலும், அமெரிக்கா இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், 2024 தேர்தலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதன் பின்னணியில் செயல்பட்டதாக கூறப்படும் ஒரு உயர்மட்ட ஈரானிய அதிகாரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த அதிகாரி யார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. இதனிடையே, ஹெக்செத் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நீருக்கடியில் டார்பிடோவைப் பயன்படுத்தி ஈரானிய போர்க்கப்பலை அழித்தது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒரு கப்பலை மூழ்கடிப்பது இதுவே முதல் முறை. 1982 ஆம் ஆண்டில், பால்க்லேண்ட்ஸ் போரின் போது, கிரேட் பிரிட்டனின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் HMS கான்குவரர் ஒரு அர்ஜென்டினா கப்பலை டார்பிடோ மூலம் மூழ்கடித்தது.
தற்போது ஈரானுக்கு எதிரான போரில், இந்தியப் பெருங்கடலில் திங்கட்கிழமை டார்பிடோ தாக்குதல் நடந்ததாக ஹெக்செத் கூறியுள்ளார். கப்பலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இலங்கை அருகே ஒரு ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 பேர் கொல்லப்பட்டதாக
Mark 48 என்ற டார்பிடோவை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெராத் அறிவித்தார்.
மட்டுமின்றி. ஈரானிய கப்பலில் 180 பேர் இருந்ததாகவும், IRIS Dena என்ற ஈரானியப் போர்க்கப்பல் அது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த டார்பிடோ தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மட்டுமின்றி, 32 ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர் என்பதையும் இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஈரானிய ஐரிஸ் தேனா கப்பலானது அவர்களின் புதிய போர்க்கப்பல் வரிசைகளில் ஒன்றாகும். அதில் தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், பீரங்கி, இயந்திர துப்பாக்கிகள், டார்பிடோ லாஞ்சர்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
வெளியான தகவல்கலின் அடிப்படையில், இந்தக் கப்பல் பிப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், 1945 க்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்க கடற்படையின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, மார்க் 48 டார்பிடோவைப் பயன்படுத்தி எதிரி போர் கப்பலை தாக்கி, கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பியுள்ளது என அமெரிக்காவின் போர் செயலாளர் பீட் ஹெக்செத் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |