உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த இறக்குமதி வரியை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிரம்பின் வரி விதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார்.
இந்த வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு கூடுதல் வரி வசூல் கிடைக்கும் என்றும், அமெரிக்கர்கள் அதிகமான அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்துவார்கள் என்றும் டிரம்ப் விளக்கினார்.

டிரம்ப் முன்னெடுத்த இந்த வரி விதிப்பு நடவடிக்கை நாடாளுமன்ற ஒப்புதலுக்கு உட்படுத்தப்படாமல், 1977ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் தலைமையிலான அரசு இதனை நடைமுறைப்படுத்தியது.
இருப்பினும் பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட டிரம்பின் இந்த வரி வதிப்புகள் பின்னர் திருத்தப்பட்டன மற்றும் தாமதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
அதே வேளையில், ஆகஸ்ட் 2025ம் ஆண்டு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமுலில் இருக்கவும் அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வெள்ளை மாளிகை கோரிக்கை முன்வைத்ததை அடுத்து இந்த விவகாரம் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது.
டிரம்ப் வரி விதிப்பு ரத்து

இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், டிரம்ப் தன்னுடைய அதிகாரங்களை மீறி நாட்டின் அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை இதற்காக பயன்படுத்தி இருப்பதாக சுட்டிக் காட்டியது.
அத்துடன் வரி விதிப்பு தொடர்பான எந்தவொரு அனுமதியையும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வழங்கவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தனர்.
இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பு சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
வரிவிதிப்பு ரத்துக்கு நீதிபதிகள் 6 பேர் ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் இருந்த நிலையில், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவை கருத்தில் கொண்டு வரி ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |