குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய அமெரிக்க பெற்றோர்: மறைக்க செய்த விபரீத செயல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக டாட்டூ குத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு பச்சை குத்திய பெற்றோர்
அமெரிக்காவின் டெக்சாஸில் தாய் மேகன் மே ஃபார் (27) மற்றும் மாற்றாந்தாய் தந்தை கன்னர் ஃபார்(23) ஆகிய இருவரும் தங்கள் 9 வயது மற்றும் 5 வயது குழந்தைகளை வலுக்கட்டாயமாக கட்டிப்போட்டு டாட்டூ குத்தி உள்ளனர்.
ஒரு குழந்தைக்கு காலிலும், மற்றொரு குழந்தைக்கு தோளிலும் டாட்டூ குத்தப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளை கட்டி போட்டு, வாயை டேப்பால் மூடி, கண்களை துணியால் மறைத்து இதனை அவர்களது பெற்றோர்கள் செய்து இருப்பதாக பெறப்பட்ட கைது வாக்குமூலத்தின்படி தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட இந்த கொடுமையை அவரது உயிரியல் தந்தையும், மாற்றாந்தாயும் கவனித்த நிலையில், இந்த விஷயத்தை உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு சேவைக்கு (CPS) தெரியப்படுத்தியுள்ளனர்.
டாட்டூ குத்தியதை மறைக்க முயற்சி
இந்நிலையில், குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக டாட்டூ குத்தியது தொடர்பான தகவலை குழந்தைகள் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தம்பதியினர் அறிந்ததுமே, தவறுகளை மறைக்க குழந்தைகளுக்கு டாட்டூ குத்தப்பட்ட இடத்தை உடலில் இருந்து வெட்டி எடுத்துள்ளனர்.
Zavalla Police Department
மேலும் டாட்டூக்களை எலுமிச்சை சாறுடன் சேர்த்து அவற்றை அழிக்க முயற்சித்துள்ளனர் என்பது குழந்தைகள் மீது இருந்த பெரிய காயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெற்றோர்கள் இருவரும் குழந்தைகளை காயப்படுத்தியது மற்றும் சட்ட விரோதமாக கட்டுப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும், பாதுகாப்பு சேவை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.