ஈரானிய விமான நிறுவனங்களை முடக்க அமெரிக்கா திட்டம்: விரிவடையும் பொருளாதாரத் தடை எச்சரிக்கை
US threatens to Sanctions on Iranian airlines: ஈரான் விமான நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானிய விமான நிறுவனங்கள் முடக்கப்படுமா?
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் போர் சூழல் காரணமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரானிய விமான நிறுவனங்களின் சர்வதேச போக்குவரத்து சேவை முழுமையாக முடக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கான வெளிநாட்டு விமான நிறுவனங்களின் உதவிகளை தடுத்து ஈரான் நாட்டு விமானங்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு வருவதாக அமெரிக்க கருவூல செயலாளர் (US Treasury Secretary) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார்.
CNBC தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், விமான நிலையங்கள், எரிபொருள் விநியோக நிறுவனங்கள், டிக்கெட் விற்பனை முகவர்கள் என விமான சேவை வழங்குநர்களுக்கு கடும் எச்சரிக்கை ஸ்காட் பெசென்ட் வழங்கியுள்ளார்.
அதில், ஈரானிய விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது, விமானங்களை தரையிறங்க அனுமதிப்பது மற்றும் ஈரானிய விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை செய்து போன்ற செயல்களை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனங்களும் செய்ய கூடாது.

உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும், குறிப்பாக அமெரிக்க டொலர் நிதி அமைப்பில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க கருவூலத் துறையால் இதுவரை பட்டியலில் சேர்க்கப்படாத ஈரானிய விமான நிறுவனங்கள் மற்றும் அதற்கு உதவுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.