அமெரிக்காவில் இறுகும் மாணவர் விசா விதிகள்... இந்த 4 விடயங்களால் நாடு கடத்தப்படலாம்
அமெரிக்காவில் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு நடைமுறையை அமுல்படுத்த ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
விசா சரிபார்ப்பு
நாட்டின் தலைசிறந்த சில கல்லூரிகளுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள பகைமையே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக பயன்பாடு தொடர்பிலான கண்காணிப்பைத் தொடங்குவதால், புதிய மாணவர் விசா சந்திப்புகளை திட்டமிடுவதை நிறுத்துமாறு அமெரிக்க வெளிவிவகாரத்துறை ஏற்கனவே தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், விசா சரிபார்ப்பு செயல்முறையின் கடுமையான தன்மையை எடுத்துரைத்து, வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவிக்கையில், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதன் அவசியத்தை அமெரிக்கா முழுமையாக மதிப்பிடும் என்றார்.
உங்களைத் தொடர்ந்து கண்காணிப்போம் என குறிப்பிட்டுள்ள அவர், நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் சரி அல்லது விசா தேவைப்படும் சுற்றுலாப்பயணியாக இருந்தாலும் சரி, அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நாங்கள் உங்களை கண்காணிப்போம் என்றார்.
அமெரிக்காவிற்கு வருபவர்கள் யார் என்பதை மதிப்பிடுவதற்கு எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம், அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி.
நடவடிக்கை எடுக்கும்
ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிகளை விதித்துள்ளது, இதன் விளைவாக சர்வதேச மாணவர்கள் நாடு கடத்தப்படலாம். அதாவது வெளிநாட்டு மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது கல்லூரிகளில் தங்கள் படிப்புகளை பாதியில் நிறுத்தினால் அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் விசா காலத்தை தாண்டி தங்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத வேலைகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் கேள்விக்குரிய உள்ளடக்கத்தை பதிவிடுவது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிய போக்குவரத்து குற்றங்கள் அல்லது மது அருந்தியது தொடர்பான சம்பவங்களுக்காக நாட்டில் ஏற்கனவே உள்ள ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தையும் ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்தது.
இதனையடுத்து பல மாணவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நிர்வாகம் மாணவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை மீட்டெடுப்பதாகக் கூறியது. ஆனால் ட்ரம்ப் அரசாங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |