நூற்றுக்கணக்கான ஈரானியர்களை நாடு கடத்த முடிவு செய்த ட்ரம்ப் நிர்வாகம்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த சுமார் 400 ஈரானியர்களை நாடு கடத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக நுழைந்த
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றத்திற்கு எதிரான தீவிர ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாயன்று தெரிவித்தார்.
மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 120 ஈரானியர்களை முதற்கட்டமாக நாடு கடத்த முடிவு செய்துள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் ஹொசைன் நௌஷாபாடி தெரிவித்துள்ளார்.
பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு அசாதாரண நிகழ்வாக இந்த நாடுகடத்தல் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சுமார் 400 ஈரானியர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்கள் என்றும் நௌஷாபாடி கூறியுள்ளார்.
120 பேர் கொண்ட முதல் குழு அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஈரானை சென்றடையும். திங்கட்கிழமை லூசியானாவிலிருந்து அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட விமானம் ஒன்று புறப்பட்டு, கத்தார் வழியாக ஈரானை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களை நாடு கடத்த
மேலும், பல மாதங்களாக தடுப்பு மையங்களில் காவலில் இருந்த நிலையில் சில ஈரானியர்கள் வெளியேற முன்வந்தனர், சிலர் இந்த நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் சாதனை எண்ணிக்கையிலான மக்களை நாடு கடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதுடன், தீவிர நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
இருப்பினும், அவரது நிர்வாகம் நாடுகடத்தல் அளவை அதிகரிக்க போராடி வருகிறது, அதே நேரத்தில் புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்கு அனுப்ப புதிய வழிகளையும் உருவாக்கியுள்ளது.
இந்தியா உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை ட்ரம்ப் நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |