அணு ஆயுதத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா முற்றிலும் தயார்... புடினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு எதிரான பல அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா முற்றிலும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல
இந்த நெருக்கடியின் மத்தியில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிகளை ரஷ்யா அருகே நகர்த்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான டிமித்ரி மெத்வெதேவ், அச்சுறுத்தும் கருத்தை வெளியிட்டு, ரஷ்யாவுடன் போருக்கான கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருவதாக எச்சரித்தார்.
ஆனால் மெத்வெதேவின் வார்த்தைகள் முட்டாள்தனமானவை மற்றும் எரிச்சலூட்டுபவை என ட்ரம்ப் சாடியுள்ளார். இதனையடுத்தே இரு அணு ஆயுத நீர்மூழ்கிகளை ரஷ்யா அருகே உரிய பிராந்தியத்தில் நிலைநிறுத்த ட்ரம்ப் உத்தரவிட்டார்.
2008 முதல் 2012 வரை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த மெத்வெதேவ், அமெரிக்காவை அணு ஆயுத அழிவால் அச்சுறுத்தியதாகத் தெரிகிறது. மட்டுமின்றி, ரஷ்யா ஒன்றும் இஸ்ரேல் அல்லது ஈரான் அல்ல என்றும் மெத்வதேவ் எச்சரித்துள்ளார்.
மெத்வதேவ் Dead Hand என ரஷ்யாவின் அணு ஆயுத அமைப்பை குறிப்பிட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ஒரு நெருக்கடியான சூழலில் எதிரி நாடுகளால் ரஷ்ய ஜனாதிபதி கொல்லப்பட்டாலும், முழு வீச்சிலான அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் வகையில் Dead Hand அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் இருப்பதே வழக்கம்
மேலும், ஒவ்வொரு முறையும் கெடு விதிப்பது என்பது, போரை நோக்கி முன்னேறுவதாகும் என்றும் மெத்வதேவ் எச்சரித்துள்ளார். ஆனால் ட்ரம்ப் தனது பதிவில் அணு ஆயுத நீர்மூழ்கி என குறிப்பிடவில்லை.
மட்டுமின்றி, ரஷ்யா அருகே நீர்மூழ்கியை எங்கே நிலைநிறுத்த உள்ளனர் என்பது தொடர்பிலும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை, அது அமெரிக்க இராணுவத்தால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா எப்போதும் தயார் நிலையில் இருப்பதே வழக்கம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மெத்வதேவின் கருத்துகள் வெறும் கருத்தாக மட்டுமே இருக்கும் என்று தாம் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ட்ரம்ப் ஆரம்பத்தில் புடினுக்கு 50 நாள் காலக்கெடுவை வழங்கினார், பின்னர் ரஷ்யா சார்பாக எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஜூலை 29 முதல் அதை 10 நாட்களாகக் குறைத்தார்.
மேலும் ஆகஸ்டு 8ம் திகதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால், கடுமையான வரி விதிப்பு உறுதி என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |