அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஐரோப்பா சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்: ஜேர்மன் அமைச்சர்
ஜேர்மனியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் திட்டமானது, ஐரோப்பாவைத் தனது சொந்தப் பாதுகாப்பை வலுப்படுத்தத் தூண்டும் என ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
திரும்பப் பெறுவதாக
ஈரான் போர் மற்றும் சுங்கவரிப் பதட்டங்கள் தொடர்பான விரிசல்கள், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவுகளில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில்,

பென்டகன் தனது மிகப்பெரிய ஐரோப்பிய தளமான ஜேர்மனியில் இருந்து 5,000 படைகளைத் திரும்பப் பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் சனிக்கிழமையன்று புளோரிடாவில் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் 5,000-க்கும் அதிகமானோரை திரும்பப் பெறப் போகிறோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் இந்த முடிவின் ஒரு பகுதியாக, நீண்ட தூரம் சென்று தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளைக் கொண்ட ஒரு அமெரிக்கப் படைப்பிரிவை ஜேர்மனிக்கு அனுப்பும் ஜோ பைடன் காலத் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது.
இது ஜேர்மனிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக ஜேர்மனி மாற அந்த நடவடிக்கை அமைந்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நகர்வு எதிர்பார்க்கப்பட்டது என்றும், இது ஜேர்மனியில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏறத்தாழ 40,000 அமெரிக்கப் படை வீரர்களைப் பாதிக்கும் என்றும் அமைச்சர் பிஸ்டோரியஸ் கூறியுள்ளார்.

பொறுப்பேற்க வேண்டும்
மேலும், ஐரோப்பியர்களாகிய நாம் நமது சொந்தப் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், ஜேர்மனி சரியான பாதையில் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்திலேயே ஜேர்மனியில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்குமாறு அழைப்பு விடுத்ததோடு, ஐரோப்பா தனது பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தற்போதைய நிலை என்ன என குறிப்பிட்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தியை ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில் இந்த அச்சுறுத்தலை ட்ரம்ப் அதிகரித்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் படைகளைத் திரும்பப் பெறும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |