சிவப்பு எச்சரிக்கை... ரஷ்யாவை விட்டு அமெரிக்க மக்கள் வெளியேறுங்கள்
அனைத்து அமெரிக்க மக்களும் சுற்றுலாப்பயணிகளும் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளிவிவகாரத்துறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அனைத்து அமெரிக்கர்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு நிலை 4 பயண எச்சரிக்கையை சனிக்கிழமையன்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை வழங்கியுள்ளது.
இதில், உக்ரைனில் ரஷ்ய இராணுவப் படைகளின் நியாயமற்ற தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம். மேலும், ரஷ்ய அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகளால் அமெரிக்க குடிமக்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட சாத்தியம் இருப்பதாகவும்,
அமெரிக்க குடிமக்களுக்கு உதவும் வகையில் ரஷ்யாவில் உள்ள தூதரகங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் கண்டிப்பாக பயணங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டுக்கு உதவும் வகையில் நாடுகள் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் கவனிக்கப்படுவதாகவும்,
அது ரஷ்யாவுக்கு எதிரான போரில் அவர்களும் கலந்து கொள்வதாகவே கருதப்படும் என விளாடிமிர் புடின் சனிக்கிழமை அறிவித்த நிலையிலேயே அமெரிக்கா தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சனிக்கிழமை காலை அமெரிக்க செனட்டர்களுடன் இணைதளம் ஊடாக பேசினார், மேலும் ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க கூடுதல் ஆதரவைக் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.