அமெரிக்காவில் பரபரப்பு! பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் படுகாயம்; சிறுமி கைது!
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில், நியூபோர்ட் நியூஸில் உள்ள ஹெரிட்டேஜ் உயர்நிலைப் பள்ளிக்குள் திங்கட்கிழமை பிற்பகல் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, குறைந்தது இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். 17 வயது மாணவன், முகத்தின் ஓரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டார் மற்றும் 17 வயது மாணவி கீழ் காலில் சுடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவருக்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களைத் தவிர்த்து, மேலும் 2 மாணவர்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு மாணவி கையில் சிறு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார், மற்றோரு மாணவர் ஆஸ்த்துமா பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டார்.
சம்பவத்தை தொடர்ந்து, அருகில் உள்ள டென்னிஸ் கோர்ட்டுக்கு மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, பின்னர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, அவர்களுடன் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பதின்ம வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார், இருப்பினும் அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்தானா என்பது தெரியவில்லை.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அவர் அவர் அறிந்திருப்பதாகவும், அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத்த தொடர்ந்து இந்த துப்பாக்கிச்சுடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.




