ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணெய் வாங்கும் இந்தியா: அமெரிக்காவின் தளர்வு நீடிக்குமா?
பொருளாதார தடை தொடர்பான தளர்வுகளை அமெரிக்கா அறிவித்துள்ளதை தொடர்ந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா கவனமுடன் பரிசீலித்து வருகிறது.
ஈரான் மீதான பொருளாதார தடை தளர்வு
கடந்த 2019ம் ஆண்டு ஈரானுக்கு எதிரான பொருளாதார கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்து இருந்தது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளை அமெரிக்கா 60 நாட்களுக்கு நீக்கி சலுகை அளித்துள்ளது.

ஆகஸ்ட் 21ம் திகதி வரை அமெரிக்காவின் இந்த தளர்வு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி, எரிபொருளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி மற்றும் தளவாட வசதி மற்றும் ஈரானிய பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் தொடர்பான அனுமதி வழங்கப்படுகிறது.
ஈரான் எண்ணெயை வாங்க இந்தியா திட்டம்
அமெரிக்கா அறிவித்துள்ள இந்த தளர்வுகளை தொடர்ந்து, ஈரானிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெயை வாங்குவது தொடர்பாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாக இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சர்வதேச எண்ணெய் வர்த்தக நிறுவனங்களை அணுகி இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடனான உறவை புதுப்பிப்பது குறித்து ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவின் இந்த தற்காலிக தளர்வு ஒரு வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறுவதன் மூலம் ஏற்படக்கூடிய இராஜதந்திர விளைவுகள் மற்றும் நிதி விளைவுகள் குறித்து இந்திய நிறுவனங்கள் கவனமுடன் செயல்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |