தேர்தல் கட்டாயம்.... ஜெலென்ஸ்கிக்கு கடும் அழுத்தம் தரும் ட்ரம்ப் நிர்வகாம்
உக்ரைனில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த அமெரிக்கா விரும்புகிறது என்று ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சிறப்பு தூதர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகத்திற்கு நல்லது
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவிக்கையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல்கள் நடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவுடன் ஒரு போர் நிறுத்தம் எட்டப்பட்டால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான ஜனநாயக நாடுகள் போர்க் காலத்தில் தேர்தல்களை நடத்தியுள்ளன. உக்ரைனும் அவ்வாறு செய்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என செய்தி ஊடகம் ஒன்றில் கீத் கெல்லாக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அப்படியான ஒரு நடவடிக்கை ஜனநாயகத்திற்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். அதுதான் ஒரு உறுதியான ஜனநாயகத்தின் அழகு, இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றார்.
அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தையில் உக்ரைனை புறக்கணிப்பது என்பது மிக ஆபத்தான செயல் என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்த நிலையிலேயே அமெரிக்கா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு முன்பு, உக்ரைன் - ரஷ்யா போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று ட்ரம்ப் அடிக்கடி கூறி வந்தார்.
மட்டுமின்றி, ட்ரம்பும் கெல்லாக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான திட்டத்தில் தாங்கள் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளனர்.
ஆனால் அத்தகைய திட்டம் பற்றிய விவரங்களையோ அல்லது அதை செயல்படுத்துவதற்கான கால அளவையோ அவர்கள் மிகக் குறைவாகவே வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தப்படலாம்
இந்த நிலையில், கெல்லாக் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தரப்பு, ரஷ்யாவுடனான எந்தவொரு போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாகவும் உக்ரைனை தேர்தலுக்கு ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுப்பது என்றே முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சமீபத்திய மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் தேர்தல்களை நடத்திய பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் தலையீடு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் தேர்தல் கட்டாயம் என உக்ரைனுக்கு அழுத்தமளிப்பது அரசியல் நிபுணர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனிடையே, உக்ரைனில் சண்டை முடிவுக்கு வந்தால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படலாம் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்பு கூறியிருந்தார். ஆனால் ரஷ்யா மீண்டும் முன்னெடுக்கும் விரோதப் போக்கைத் தடுக்க வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் நடைமுறையில் வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 ல் முடிவடையவிருந்தது, ஆனால் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இராணுவச் சட்டத்தின் கீழ் நடத்த முடியாது. ரஷ்யா படையெடுப்பை அடுத்து பிப்ரவரி 2022 ல் உக்ரைன் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |