ஹார்முஸ் திறந்திருப்பதாக ட்ரம்ப்... முற்றுகை அமுலுக்கு வந்ததாக அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு திறந்தே இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், கப்பற்படை முற்றுகை அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டு, கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலவந்தத்தைப் பயன்படுத்துவோம்
ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள முற்றுகையானது சட்டவிரோதம் என ஏற்கனவே ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, தனது கடற்படையினர் முற்றுகையை அமுல்படுத்துவது தொடர்பான ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.
U.S. naval vessels are on patrol in the Gulf of Oman as CENTCOM continues to execute a U.S. blockade on ships entering and departing Iranian ports. U.S. forces are present, vigilant, and ready to ensure compliance. pic.twitter.com/dnHR2oz0ZN
— U.S. Central Command (@CENTCOM) April 15, 2026
அதில் கடற்படையின் முற்றுகையை மீற முயற்சிக்காதீர்கள். ஈரானிய துறைமுகத்திற்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள், வழிமறித்து கைப்பற்றுவதற்காக சோதனையிடப்படும்.
இந்தத் தடைக்கு நீங்கள் இணங்காவிட்டால், நாங்கள் பலவந்தத்தைப் பயன்படுத்துவோம் என்றும், முழு அமெரிக்க கடற்படையும் இணக்கத்தை கட்டாயப்படுத்த தயாராக உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, யுஎஸ்எஸ் ஸ்டிரைக் கேரியர் குரூப் ஆபிரகாம் லிங்கனைச் சேர்ந்த சுமார் 5,000 மாலுமிகளும் கடற்படை வீரர்களும் கப்பல்களை மறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் அடியோடு நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி,

எங்கள் நாட்டை முற்றுகையிட முடியாது என்று கூறியதுடன், இந்த முற்றுகையானது ஒரு பலவீனமான போர் நிறுத்தத்தை மீறுவதாகவும், ஈரானிய ஆயுதப் படைகளிடமிருந்து தகுந்த பதிலடியைத் தூண்டக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டுத் தலையீடு
அத்துடன், ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் உட்பட, ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் அமையக்கூடிய ஒரு சர்வதேசக் கூட்டணிக்கான ஐரோப்பிய முன்மொழிவுகள் குறித்தும் பாகாயி பேசியுள்ளார்.
மேலும், பிராந்திய விவகாரங்களில் எந்தவொரு நடவடிக்கையும் அல்லது தலையீடும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று கூறி, அவர் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் நிராகரித்தார்.

ஈரான் ஒரு கடலோர நாடு என்ற முறையிலும், பிராந்திய நாடுகளின் உதவியுடனும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும் பிராந்தியத்தில் அதன் தலையீடும் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஈரான் ஹார்முஸ் நீரிணைக்கு பாதுகாப்பு வழங்க முழுத் தகுதி இருப்பதாக பாகாயி வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |