பனாமா கால்வாயில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்... இறுகும் வெனிசுலா விவகாரம்
அமெரிக்காவின் ஏவுகணைக் கப்பலான USS Lake Erie வெள்ளிக்கிழமை இரவு பசிபிக் பெருங்கடலில் இருந்து பனாமா கால்வாயைக் கடந்து கரீபியன் நோக்கி பயணப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுலா கடற்கரைக்கு அருகில் போர்க்கப்பல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் பனாமா கால்வாயைக் கடந்து கிழக்கில் அட்லாண்டிக் நோக்கி பயணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் பிராந்திய நீர்நிலைகளுக்கு அருகில், தெற்கு கரீபியனுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
கால்வாயின் பசிபிக் நுழைவாயிலில் உள்ள ரோட்மேன் துறைமுகத்தில் கடந்த இரண்டு நாட்களாக USS Lake Erie நங்கூரமிட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஒரு போதைப்பொருள் குழுவை வழிநடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதுடன், அவரைப் பிடிப்பதற்கான பரிசுத் தொகையை இரட்டிப்பாக்கி 50 மில்லியன் டொலர்களாக உயர்த்தியுள்ளது.
ரோந்து நடவடிக்கை
இருப்பினும், வெனிசுலா மீது அமெரிக்கா படையெடுக்கும் என்ற அச்சுறுத்தல் இதுவரை மக்கள் மத்தியில் உருவாகவில்லை. இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொலம்பிய எல்லையில் 15,000 பாதுகாப்புப் படையினரை நிறுத்துவதாக வெனிசுலா நிர்வாகம் திங்களன்று அறிவித்தது.
ஒரு நாள் கழித்து, வெனிசுலா தனது பிராந்திய நீர்நிலைகளில் ட்ரோன்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மூலம் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தது.
இதனிடையே, அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான போராளிக் குழுக்களை அணிதிரட்டியதாகவும் மதுரோ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |