யூடியூப் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக: சொந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய நபருக்கு காத்திருக்கும் ஆப்பு
யூடியூப்பில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய விமானத்தை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
விமானத்தை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கிய நபர்
அமெரிக்காவை சேர்ந்த ட்ரெவர் ஜேக்கப்(Trevor Jacob) என்ற 29 வயதுடைய யூடியூப்பர் தன்னுடைய சிறிய ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தை கலிபோர்னியாவின் லாஸ் பேட்ரெஸ் தேசிய வனப்பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மோத செய்தார்.
மேலும் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு, அதற்கு “நான் எனது விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேன்” என தலைப்பும் சூட்டி இருந்தார்.
அந்த வீடியோவில், யூடியூப்-பர் ட்ரெவர் ஜேக்கப் விமானம் செயலிழந்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார், ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக பாரசூட் உடன் இருப்பதும், கையில் செல்பி ஸ்டிக்குடன் குதிப்பதையும் பார்க்க முடிந்தது.
இதையடுத்து இந்த வீடியோ விமான ஆர்வலர்களிடம் சந்தேகத்தை தூண்டி, விபத்து உண்மையானதா என்ற கேள்வியை எழுப்பியது, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகமும் ட்ரெவர் ஜேக்கப் செயலில் முரண்பாடு இருப்பதாக ஒப்புக் கொண்டது.
20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
இந்நிலையில், ட்ரெவர் ஜேக்கப்-பின் தனியார் விமானி என்பதற்கான சான்றிதழையும் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) ரத்து செய்தது.
காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், விமானம் முழுவதும் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதையும், விமானி முன்னரே பாரசூட்டுடன் முன்னெச்சரிகையாக இருந்துள்ளார் என்பதையும் கண்டறிந்தனர்.
TREVOR JACOB
மேலும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், விமானி எதற்காக அவசர வான் போக்குவரத்து அமைப்பை தொடர்பு கொள்ளவில்லை என்றும், இஞ்சினை ஏன் மீண்டும் இயக்க முயற்சிக்க வில்லை, அத்துடன் ஏன் விமானத்தை விரைவாக தரையிறக்க முடிவு செய்யவில்லை என்பதை விமானத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஏவியேஷன் அதிகாரிகள் முன்வைத்த பெரும்பாலான சந்தேகங்களை மறுத்த ட்ரெவர் ஜேக்கப் வரும் வாரத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் விசாரணைக்கு கலந்து கொண்ட பிறகு, அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TREVOR JACOB
இதற்கிடையில் யூடியூப்பில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொந்த சிறிய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.