ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? அமெரிக்காவுக்கு தொடரும் பெரிய அச்சம்
ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமா என்பது குறித்து அமெரிக்கா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியபோது, தங்கள் நாட்டின் அணு ஆயுதங்கள் தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறினார்.
இதையடுத்து கண்காணிப்பை அமெரிக்கா தொடங்கியது. இந்த நிலையில் தற்போது புகைப்படம் எடுக்கும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் மூலமாக கண்காணிப்பை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போர் கப்பல்கள், ஏவுகணை தளங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பதுங்குகுழிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் இதுவரையில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கான ஆயத்தப்பணிகள் எதையும் ரஷ்யா மேற்கொள்ளவில்லை என இதுகுறித்து ஆய்வு செய்து வரும் அறிஞர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். நேட்டோ அமைப்பும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவை சரிக்கட்ட அவர் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷ்யா முடிவெடுத்துவிட்டால் சாதாரணமாக குண்டுவீச்சு தாக்குதலை அந்நாட்டு ராணுவம் வெகுவாக குறைத்திருக்கும் என்று அமெரிக்க அணு ஆயுத தகவல் மைய இயக்குநர் ஹான்ஸ் எம் கிரிஸ்டென்சன் தெரிவித்துள்ளார்.
தீவிரமாக கண்காணித்தாலும் அமெரிக்காவுக்கு ரஷ்யா குறித்த அச்சம் முற்றிலுமாக நீங்கவில்லை என்றே தெரிகிறது.