கிரீன்லாந்தை விலைக்கு வாங்க... இந்திய வம்சாவளி பெண்மணியிடம் பொறுப்பை ஒப்படைத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் கிரீன்லாந்திற்கு ஒரு சிறப்பு குழுவுடன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறவு வலுவடையும்
டென்மார்க்கிடமிருந்து இந்த ஆர்க்டிக் பிரதேசத்தை வாங்குவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகவே உஷா வான்ஸின் இந்தப் பயணம் என்றும் கூறப்படுகிறது.
கிரீன்லாந்துக்கு பயணம் முன்னெடுப்பது தொடர்பில் தமது சமூக ஊடக பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ள இந்திய வம்சாவளி உஷா வான்ஸ், எதிர்காலத்தில் அமெரிக்கா-கிரீன்லாந்து உறவு வலுவடையும் என்று தான் நம்புவதாக பதிவு செய்துள்ளார்.
உஷா வான்ஸ் தலைமையில் கிரீன்லாந்துக்கு பயணப்படும் குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த இருவரும் தங்கள் பயணத்தின் போது கிரீன்லாந்தில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைப் பார்வையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை புறப்படும் இந்த குழு, அங்கிருந்து சனிக்கிழமை அமெரிக்கா திரும்புவார்கள். இந்த மாத தொடக்கத்தில் உஷா வான்ஸ் தனியாக இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தற்போது கிரீன்லாந்துக்கும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் மூத்த மகன் Nuuk நகருக்கு பயணப்பட்டிருந்தார். கிரீன்லாந்தில் முன்னெடுக்கப்படும் நாய்களுக்கான Avannaata Qimussersu தேசிய ஓட்டப்பந்தயம் போட்டிகளில் சிறப்பு விருந்தினராக உஷா வான்ஸ் கலந்துகொள்ள இருகிறார்.
குறித்த காணொளியில், கிரீன்லாந்து மக்களில் பலரை விரைவில் சந்தித்து, உங்கள் அழகான நிலம், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பற்றி உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என உஷா வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியில் டென்மார்க்
கிரீன்லாந்து இயற்கை வளங்கள் மிகுந்த, ஆர்க்டிக் பிராந்தியத்தில் இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்கான முக்கியமான ஒரு பகுதியாகும். 836,330 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 55,775 மட்டுமே.
உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு கிரீன்லாந்து. ஆனால் ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சிகளுக்கு டென்மார்க் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கிரீன்லாந்தை விற்கும் நெருக்கடியில் டென்மார்க் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கிரீன்லாந்து மட்டுமல்ல, பனாமா கால்வாயை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும்,
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் தமது விருப்பத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |