தன் நாய்களைக் காப்பாற்ற தன்னந்தனியாக வெறுங்கையுடன் கரடியுடன் போராடிய இளம்பெண்: கமெராவில் சிக்கிய காட்சி
தன் நாய்களைத் தாக்க வந்த கரடியுடன், தன்னந்தனியாக வெறுங்கையுடன் இளம்பெண் ஒருவர் போராடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஒரு வீட்டின் மதில் சுவரில் கரடி ஒன்று ஏறியதைக் கண்ட அந்த வீட்டு நாய்கள், அதைத் துரத்துவதற்காக அதைப் பார்த்து குரைத்துள்ளன. ஆனால், அந்த கரடி அங்கிருந்து அசைவதாக தெரியவில்லை.
அப்போது, நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து Hailey Morinico (17) என்ற இளம்பெண் வெளியே வந்திருக்கிறார். அந்த கரடி தன் நாய்களைத் தாக்க முயல்வதைக் கண்ட Hailey, சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று அந்த கரடியைப் பிடித்து தள்ளிவிட்டிருக்கிறார். அந்த கரடி தடுமாறி விழ, அதற்குள் தன் நாய்களைக் காப்பாற்றி வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் Hailey.
ஆனாலும், அதற்குப் பின்பும் அந்தக் கரடி மீண்டும் அந்த மதில் சுவரில் ஏறியுள்ளது. காரணம் என்னவென்றால், அது ஒரு தாய்க் கரடி. தன் குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காகத்தான் அது நாய்களைத் துரத்த முயன்றிருக்கிறது. கரடி தன் குட்டிகளுக்காக போராட, Hailey தன் நாய்களுக்காக போராட, கடைசியில் Haileyயும் ஜெயித்துவிட்டார், கரடியும் தன் குட்டிகளை பாதுகாத்துவிட்டது.
இந்த வீடியோ டிக் டாக்கில் வெளியாக, எட்டு மணி நேரத்திற்குள் 53,200 லைக்குகளைப் பெற்றுவிட்டது. Haileyக்கு பாராட்டுகள் குவிகின்றன. என்ன சாப்பிடுகிறார் இந்த சின்னப்பெண் என வேடிக்கையாக கேட்டிருக்கிறார்கள் மக்கள்.
தன் நாய்களுக்காக போராடி எதிர்பாராத விதமாக திடீரென பிரபலமாகிவிட்ட Haileyக்கு கையில் சுளுக்கும் முழங்கால்களில் லேசான காயமும் மட்டும் ஏற்பட்டுள்ளதாம்.
உண்மையில் குட்டிகளுடன் இருக்கும் எந்த பெண் விலங்கும், குறிப்பாக கரடிகள் பயங்கர ஆவேசமாக நடந்துகொள்ளும். அப்படியும் Hailey அதனிடமிருந்து தன் நாய்களைக் காப்பாற்றியது நிச்சயமாக பெரிய விடயம்தான்.