தெருநாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம் - அதிர்ச்சி சம்பவம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருநாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் நேற்று அயன் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, தெருநாய் கூட்டம் திடீரென விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை தாக்க முயன்றது. தெருநாய்கள் பின்தொடர்ந்து துரத்தியதால், உயிருக்கு பயந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடினர். அப்போது, அயன் தடுமாறி கீழே விழுந்தான்.
அந்த சமயம் தெரு நாய்கள் கூட்டம் அச்சிறுவன் மீது பாய்ந்து வெறித்தனமாக தாக்குதல் நடத்தின. தன் பற்களால் அயனை கடித்து குதறின. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அயனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அயன் பரிதாபமாக உயிரிழந்தான். இத்தாக்குதலில் ஒரு குழந்தையும் காயமடைந்தது.
தொடரும் மரணங்கள்
2 மாதங்களுக்கு முன், தெருநாய்கள் தாக்கியதில், 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய தெருநாய்கள் 150 மீட்டர் இழுத்துச் சென்று கொன்றது.
இன்னொரு சம்பவத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி அன்று, உத்தரபிரதேசத்தின் அலிகார் மற்றும் மொராதாபாத் மாவட்டங்களில் 2 வெவ்வேறு சம்பவங்களில் தெருநாய்களால் 2 குழந்தைகள் உயிரிழந்தன.
அதேபோல், அலிகாரில், குவார்சி காவல் நிலையப் பகுதியில் 3 மாத கைக்குழந்தையும், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பிலாரி பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் 7 வயது சிறுவனும் பலியாயினர்.