வேலைக்கு சேர்ந்த மறுநாள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட செவிலியர்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வேலைக்கு சேர்ந்த மறுநாளே செவிலியர் ஒருவர் மருத்துவமனை சுவற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் நகரத்தில் உள்ள நியூ ஜீவன் எனும் தனியார் மருத்துவமனையின் சுவரில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது.
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மருத்துவமனையின் உரிமையாளர் உட்பட 3 பேரை குற்றவாளிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் பலாத்காரம் உறுதி செய்யப்படவில்லை என்று மூத்த பொலிஸ் அதிகாரி சஷி சேகர் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்..
உயிரிழந்த 19 வயது பெண் செவிலியர் வெள்ளிக்கிழமை அன்று தான் அந்த மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மறுநாள் அவள் இறந்து கிடந்தார். மேலும், ஐந்து நாட்களுக்கு முன்பு தான் அந்த மருத்துவமனை திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவரில் அப்பெண்ணின் உடல் தொங்குவதை மக்கள் படம் எடுத்த நிலையில், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.