சுவிஸ் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி பெற்ற ஏராளமானோர்?: பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி பெற்ற பலர் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காக மருத்துவமனைகள் கட்டாயப்படுத்தி மருத்துவமனை ஊழியர்களிடம் கையெழுத்து பெறுவதாகவும் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
அந்த வீடியோவில் ஜேர்மன் மொழியில் பேசும் ஒருவர், Sankt Gallen மாகாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஜூலியா என்ற செவிலியரை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்ற நிலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஜூலியா என்ற அந்த செவிலியரை இது தொடர்பாக அணுகியபோது, அதிர்ச்சியடைந்த அந்த செவிலியர் அது போலிச் செய்தி என்றும், தன்னை அந்த செய்தியுடன் இணைத்ததற்காக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த வீடியோவில் சூரிச்சிலுள்ள Männedorf மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரும், இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று சுவிஸ் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 686 என்றும், அதில் 275 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 90 சதவிகிதம் பேரும் தடுப்பூசி பெறாதவர்கள் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.