பொறாமை, பகை, தரக்குறைவான பேச்சு.., சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு
நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.5 கோடி நஷ்ட ஈடு
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர், "கடந்த 1991 -ம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் சினிமா துறையில் நடித்தேன்.
பின்னர், எனது கடும் உழைப்பால் 300 படங்களுக்கும் மேல் நடித்து நகைச்சுவை நடிகர் ஆனேன். தற்போது, என்னுடைய சினிமா காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2000 -ம் ஆண்டு முதல் நானும், நடிகர் சிங்கமுத்துவும் ஒன்றாக சேர்ந்து நடித்த படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின்னர், எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் போல அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் என் மீது அவர் பொறாமை, பகை கொண்டார். 2015 -ம் ஆண்டுக்கு பிறகு என்னை பற்றி மோசமாக பேச ஆரம்பித்ததால் அவருடன் சேர்ந்து படம் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.
இதனிடையே, தாம்பரத்தில் இருக்கும் பிரச்சனையான நிலத்தை எனக்கு வேண்டுமென்றே வாங்கி கொடுத்தார். இதனால் சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு என்னை பற்றி சிங்கமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் எனக்கு மனவேதனை அளித்துள்ளது.
பொதுமக்களுக்கு மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதால், 5 கோடி ரூபாயை சிங்கமுத்து மான நஷ்ட ஈடாக வழங்கவும், என்னை பற்றி பேச தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |