ரெய்னாவின் 21 வருட சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி U19 போட்டியில் 3 புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.
இந்தியா வெற்றி
இதனைத்தொடர்ந்து, மழை காரணமாக நேற்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டி 40 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி, 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக தாமஸ் ரெவ் 76 ரன்கள் எடுத்தார்.
269 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 34.3 ஓவர்களில், விக்கெட்களை இழந்து, 274 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், 2-1என்ற கணக்கில் இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
வைபவ் சூர்யவன்ஷி 3 சாதனை
இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உட்பட 31 பந்துகளில் 86 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம், U19 போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி 3 சாதனைகளை படைத்தார்.
9 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்திய யு19 அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக 2009 ஆம் ஆண்டு மன்தீப் சிங் 8 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
மேலும், U19 ஒருநாள் போட்டியில், குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த 2வது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
முன்னதாக, 2016 ஆம் ஆண்டு நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்18 பந்துகளில் அரை சதம் விளாசி இருந்தார்.
31 பந்துகளில் 86 ஓட்டங்கள் எடுத்து, 277.41 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, 250 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 80+ ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதன் மூலம், சுரேஷ் ரெய்னாவின் 21 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக, 2004 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில், 38 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்து, சுரேஷ் ரெய்னா 236.84 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |