பாரதிராஜாவைப் புதைத்த ஈரம் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்கு தீ மூட்டுவதா? - கவிஞர் வைரமுத்து
நடிகர், இயக்குநர் பாக்யராஜின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.பாக்யராஜ்
பிரபல திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநரான கே.பாக்யராஜ் தனது 73வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது பதிவில், "பதினேழே நாட்களில் இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்த மண்ணின் ஈரம் இன்னும் காயவில்லை; அதற்குள் பாக்யராஜுக்குத் தீ மூட்டுவதா?
என்ன கொடுமை இது! பாக்யராஜ் ஈடு இணையற்ற கலைஞன். அவிழ்க்க முடியாத முடிச்சுகளைத் திரைக்கதையில் இட்டு அதைத் தான் மட்டுமே அவிழ்க்கத் தெரிந்தவர்.
அவர் உருவம் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார். அவர் குரல் குறையென்று கருதப்பட்டது; அதிலும் வென்றார்.
நகைச்சுவைக்கென்று அவர் தனித்தடம் தயாரிப்பதில்லை; கண்ணின் பாகமான இமைபோல திரைக்கதையில் நகைச்சுவையை இழைத்துவிடுவார்.
80களில் தமிழ் சினிமாவை நோக்கிவந்த ஒவ்வொரு கிராமத்து இளைஞனுக்கும் நம்பிக்கை கொடுத்தவர் பாக்யராஜ். எம்.ஜி.ஆர் அவரைத் தன் வாரிசு என்றார்.
பாக்யராஜின் எதிர்பாராத மறைவு கலையுலகை அதிரவைக்கிறது. வாழ்ந்திருக்க வேண்டிய கலைஞன் அய்யா நீ! பாதியில் பயணப்பட்டு விட்டாயே! உன் உயிர் அமைதி அடைக! ஆழ்ந்த இரங்கல் அனைவருக்கும்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |