திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
திமுகவில் வைத்திலிங்கம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சி மாறுவது, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது.

அதிமுக சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆவர் வைத்திலிங்கம்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்தவர் வைத்திலிங்கம்.
இந்நிலையில் வைத்திலிங்கம் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியில் இணைந்தார்.

திமுகவில் இணைந்தது குறித்து பேசிய வைத்திலிங்கம், "அண்ணா திமுகவில் இருந்து விலகினாலும், அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை. அவர் என்னை தனிப்பட்ட முறையில் கட்சிக்கு அழைத்தார், நான் செல்ல தயாராக இல்லை, அவருடைய நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. திமுக மட்டும்தான் மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறது” என பேசியுள்ளார்.
வைத்திலிங்கம் 2001 மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் அமைச்சராக இருந்தவர்.
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்
அதே சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கவே தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணித்து வந்த டிடிவி தினகரன், சமீபத்தில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று அதிமுக பாஜக கூட்டணி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்ய பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழ்நாடு வர உள்ள நிலையில், அவரை சந்தித்து கூட்டணியில் இணைய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டிடிவி தினகரன், "விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருக்கிறோம், ஆதரவு தெரிவிப்பதற்காக பியூஷ் கோயலை சந்திக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
வைத்திலிங்கம் மற்றும் சமீபகாலமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த டிடிவி தினகரன், விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் தவெக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |