பெருவெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 நாட்கள்... காருக்குள் உயிருடன் மீட்கப்பட்ட பெண்
ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் மூன்று நாட்களாக இறந்த மைத்துனருடன் காரில் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு பிறகு
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 211 என கூறப்படுகிறது. ஆனால், மாயமானவர்கள் எண்ணிக்கை 2,000 என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கலாம் என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில் பெருவெள்ளத்தில் மூழ்கிய சுரங்கபாதை ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வலென்சியா மாகாணமானது பெருவெள்ளத்தில் சிக்கி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெருவெள்ளத்தில் கைவிடப்பட்ட வாகனங்களின் குவியல்களுக்கு மத்தியில் உதவிக்காக எழுப்பிய அழுகையைக் கேட்ட மீட்புப் பணியாளர்கள் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களைச் சோதனை செய்து கொண்டிருந்தபோது குறித்த பெண்ணை அவர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். அவருடன் உறவினர் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அதிசயம்
பேய் மழை மற்றும் பெருவெள்ளத்திற்கு பிறகு மூன்று நாட்கள் கடந்த நிலையில், பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அதிசயம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, மீட்பு நடவடிக்கை மற்றும் தூய்மைப் பணிகளுக்காக சனிக்கிழமை 5,000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்ட நிலையில்,
ஞாயிறன்று 4,000 வீரர்களும் திங்கட்கிழமை 1,000 வீரர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வார்கள் என ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். அத்துடன் 5,000 காவல்துறையினரும் பெருவெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |