வான்கூவர் வாகன தாக்குதல்: 5 வயது குழந்தை உட்பட 11 பேர்! பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்
வான்கூவர் பயங்கர வாகன தாக்குதலில் 11 பேர் பலியான நிலையில் பல கொலை குற்றச்சாட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வான்கூவர் வாகன தாக்குதல்
கனடாவின் வான்கூவர் நகரில் நேரிட்ட ஒரு பயங்கரமான வாகனத் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சோகமான சம்பவத்திற்கு காரணமான கை-ஜி ஆடம் லோ, என்ற 30 வயது நபர் தற்போது கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா வழக்குத் தொடுப்பு சேவை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வான்கூவர் குடியிருப்பாளரான லோ மீது எட்டு இரண்டாம் நிலை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால், அவர் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யப்பட்ட லோ ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் முதன் முதலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
தற்போது அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட லோவுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததற்கான மருத்துவப் பதிவுகள் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் சனிக்கிழமை இரவு 8:14 மணியளவில் 43 வது அவென்யூ மற்றும் ஃபிரேசர் வீதி சந்திப்புக்கு அருகில் நிகழ்ந்தது. லாபு லாபு தினக் கொண்டாட்டத்தில் (பிலிப்பைன்ஸின் தேசிய வீரரின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா) ஈடுபட்டிருந்த ஏராளமான மக்கள் கூட்டத்திற்குள் ஒரு நபர் வேண்டுமென்றே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக வான்கூவர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொடூரமான வன்முறைச் செயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், வான்கூவர் சமூகமும் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |