இந்தியாவிலிருந்து கனடா வந்த 376 பேரை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்புக் கோரும் கனேடிய நகரம்: வலிமிகுந்த வரலாறு
1914ஆம் ஆண்டு, மே மாதம் 23ஆம் திகதி, அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவிலிருந்து, கப்பல் ஒன்று கனடாவை வந்தடைந்தது. Komagata Maru என்று பெயரிடப்பட்ட அந்த கப்பலில் பிரித்தானிய குடியுரிமை கொண்ட 376 இந்தியர்கள் இருந்தார்கள்.
கனடாவுக்கு குடிபெயரும் ஆசையில் இருந்தவர்களை சுமந்துகொண்டு கனடாவின் வான்கூவரை வந்தடைந்த அந்த கப்பல், கனேடிய பெடரல் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்தவர்களில் 24 பேர் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்பட, மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
எப்படியாவது அனுமதி கிடைத்துவிடும், வாழ்வு சிறக்கும் என்று ஆவலுடன் உணவும் தண்ணீரும் கூட இல்லாமல் அவர்கள் அந்த கப்பலில் காத்திருந்த நிலையில், ஜூன் மாதம் 19ஆம் திகதி, வான்கூவர் நகர கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
அதில், இந்துக்கள் முதலான மற்ற ஆசிய இனத்தவர்களை கனடாவுக்குள் அனுமதித்தால், நமது கலாச்சாரத்துக்கு அவர்களால் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கேடு விளையும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்னும் ஒரு மாதம் கப்பலிலேயே காத்திருந்த நிலையில், அந்த இந்தியர்கள் அனைவரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி கட்டாயப்படுத்தப்பட்டு கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்தியா சென்றடைந்த அவர்களை பொலிசார் கைது செய்ய முயன்றபோது, ஏற்கனவே பரிதாப நிலையில் இருந்த அந்த இந்தியர்களில் 19 முதல் 20 பேர் வரை பொலிசாருடனான மோதலில் கொல்லப்பட்டார்கள், மற்றவர்கள் அரசியல் கிளர்ச்சியாளர்கள் என்று கூறி சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இந்த பரிதாப சம்பவம் நடந்து 107 ஆண்டுகள் ஆன நிலையில், வான்கூவர் மேயரான Kennedy Stewart, அந்த சம்பவத்துக்காக தற்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்று வான்கூவர் காட்டிய அந்த பாகுபாடு, சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே கொடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார் அவர்.
மே 23ஆம் திகதியை வருடாந்திர Komagata Maru நினைவு நாளாக அறிவிப்பதாக தெரிவித்துள்ள Stewart, அந்த பயணிகள் பிரகாசமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் கனடாவுக்குள் நுழைய முற்பட்டார்கள். ஆனால், கனடாவின் இனவெறுப்பு சட்டங்கள் அவர்களை பயங்கர சூழலில் கடலிலேயே கைவிட்டுவிட்டன என்கிறார்.
தற்போது வான்கூவரில் வாழ்ந்துவரும் Sukhi Ghuman (41), பிரிட்டிஷ் கொலம்பியா
பல்கலைக்கழகத்தில் பயிலும்போது Komagata Maru சம்பவம் குறித்து தான்
அறிந்துகொண்டதாக கூறுகிறார்.
அது குறித்து அவர் தன் தந்தையிடம் விசாரிக்க, தனது தாத்தாவான Harnam Singhம்,
Komagata Maru சம்பவத்தில் சிக்கிய ஒருவர் என்று கூறியுள்ளார் Sukhiயின் தந்தை.
கடைசி வரை தன் தாத்தா அந்த காயங்களுடனேயே வாழ்ந்ததாக தெரிவித்த Sukhiயின் தந்தை, மீண்டும் ஒருமுறை கனடாவுக்கு வர வாய்ப்புக் கிடைத்தபோதும், ஏற்கனவே கனடா தனக்கு அளித்த அனுபவத்தை நினைவுகூர்ந்து, கனடாவுக்கு வர அவர் மறுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்... வலி மிகுந்த அந்த வரலாற்றை தாமே அனுபவித்தவர்களால், அனுபவித்த அந்த வலியை அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியுமா என்ன!