இந்தியாவிற்கு வர கூடாது என மிரட்டல் வந்தது - வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்
உலகக்கோப்பை முடிந்த பின் இந்தியாவிற்கு திரும்பி வரக்கூடாது என மிரட்டல் வந்ததாக வருண் சக்கரவர்த்திதெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
அணியின் தோல்விக்கு வருண் சக்கரவர்த்தியின் மோசமான பந்து வீச்சும் காரணம் என ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.
அதன் பிறகு அணியில் இடம் கிடைக்காத நிலையில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் கோப்பையை வென்றதுக்கு வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சும் காரணம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், 2021 உலகக்கோப்பைக்கு பின்னர் தனக்கு ரசிகர்களிடமிருந்து மிரட்டல் வந்ததாக சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஒளிந்து கொள்வேன்
இதில் பேசிய அவர், "2021 உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை. விக்கெட்டுகள் வீழ்த்த முடியாததால் மன அழுத்தத்திற்குச் சென்றுவிட்டேன்.
தோல்விக்கு நான் தான் காரணம் என கருதிய ரசிகர்கள், நீ இந்தியாவிற்கு திரும்ப வரக்கூடாது என என்னை மிரட்டினார்கள். விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது, சிலர் தங்கள் பைக்குகளில் என்னைப் பின்தொடர்ந்தார்கள்.
என் வீட்டிற்கு வந்தனர். சில நேரங்களில் நான் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்று எனக்கு தெரியும்.
இப்போது என்னை பாராட்டுவதும் அவர்கள் தான். என்னை பெருமையாக பேசுவதையும், தாழ்த்தி பேசுவதையும் கடந்து செல்கிறேன்" என கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |