சர்பத் விற்றவர் கைக்கு பின்னாளில் வந்த பல கோடிகள் பணம்! தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய தமிழர்
வீட்டு உபயோகப் பொருட்கள் என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நிறுவனம் வசந்த் & கோ. ஏனெனில் வீட்டு உபயோகப் பொருட்கள் தொழிலில் அசைக்க முடியாத தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் வசந்த் & கோ நிறுவனர் எச். வசந்தகுமார்.
அவரின் வசந்த் & கோ நிறுவனத்தின் வருவாய் ரூ 1000 கோடிக்கும் அதிகமாக இன்று உள்ளது. வீட்டில் ஏழாவது பிள்ளையாக பிறந்த இவர் சிறு வயது முதலே கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வாழ்க்கையில் சிகரம் தொட்டவர். பல நூறு கோடிகளுக்கு அதிபதியான வசந்த்குமார் மிஸ்டர் கிளீன் இமேஜூக்கு சொந்தக்காரர்.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர் வசந்த்குமார். ஹரிபெருமாள் - தங்கம்மையார் தம்பதிக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்த வசந்த்குமார் வீட்டின் கடைக்குட்டி செல்லம்.
அகஸ்தீஸ்வரத்தில் பியூசி வரை முடித்துவிட்டு நாகர்கோவில் இந்து கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்று பட்டம் பெற்றார். விவரம் தெரியத் தொடங்கியது முதல் வசந்த்குமார் சும்மாவே இருந்ததில்லை.
பள்ளிப் பருவத்திலேயே விடுமுறை நாட்களில் சர்பத் கடை போடுவது, திருவிழா காலங்களில் பலூன் கடை போடுவது என பெற்றோரின் பாரத்தை குறைப்பதற்கான ஆகச் சிறந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்நிலையில் கல்லூரி காலத்தை நிறைவு செய்த வசந்த்குமார் தனது மூத்த சகோதரர் குமரி அனந்தன் சென்னையில் வசித்ததால் அவருக்கு உத்தாசையாக இருப்பதற்கு குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சேர்கிறார்.
சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த வி.ஜி.பி. வீட்டு உபயோகப்பொருட்கள் ஷோரூமில் விற்பனையாளராக தனது பணியை தொடங்கிய வசந்த்குமார் தொழிலில் கெட்டிக்காரராக திகழ்ந்தார். வசந்த்குமாரின் பேச்சும், சுறுசுறுப்பும் விற்பனையை இரட்டிப்பாக்கியதால் அவரை கிளை மேலாளாராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் தனது வேலையை துறந்த நிலையில் 1978ம் ஆண்டு வசந்த் அண்ட் கோ என்ற பெயரில் சிறிய அளவில் வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை ஆரம்பித்தார்.
மனது நிறைய நம்பிக்கை இருந்த போதும், வியாபாரத்தை தொடங்க அது போதுமானதாக இருக்கவில்லை. ஏனென்றால் முதல் போட்டு பொருட்களை வாங்க அவர் கையில் காசில்லை.
அப்போது சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் வசந்தகுமாருக்கு 22 ரூபாய் கடனாகக் கொடுத்தார். அந்த 22 ரூபாய் தான் வசந்த் அண்ட் கோ என்ற ஆலமரம் உருவாகப் போடப்பட்ட சிறு விதை.
70களில் ரூ.22 என்பது சிறு தொகையல்ல... மிகப் பெரிய பணம். எனவே, கையில் கிடைத்த அந்தப் பணத்தில் சாமானிய மக்களும் எளிய முறையில் வாங்கும் வகையில் மடக்கி வைத்துக் கொள்ளும் வயர் சேர், அயர்ன் பாக்ஸ் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் வசந்தகுமார்.
வசந்தகுமாரின் உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் அந்த விதைக்கு உரமானது. திசை தெரியாமல் நின்ற வசந்த்குமாருக்கு கலங்கரை விளக்கின் வெளிச்சக் கீற்று தென்படத் தொடங்கியது.
உடனடியாக வசந்த் அண்ட் கோ என்ற போர்டை பொருத்தி கடையை தொடங்குகிறார். வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்ட வசந்த்குமார் படிப்படியாக முன்னேறி தொழிலதிபராக உச்சம் தொட்டார்.
தற்போது இந்தியா முழுவதும் வசந்த் & கோவுக்கு 96 கிளைகள் உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களை பொருத்தவரை வசந்தகுமார் உருவாக்கியது வெறுமனே கிளைகள் மட்டுமல்ல அது ஒரு சாம்ராஜ்யம் ஆகும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் திகதி தனது 70வது வயதில் காலமானார்.
அவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், விஜய் வசந்த (எம்.பி மற்றும் பிரபல திரைப்பட நடிகர்), வினோத்குமார், தங்கமலர் என்ற மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
புன்சிரிப்புடன் எப்போதும் துடிப்பாக காணப்பட்ட வசந்தகுமார் உழைப்பால் எப்படி உயர வேண்டும் என்பதற்கு இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக, வழிகாட்டியாக இறுதிவரை திகழ்ந்தார் என கூறினால் அது மிகையாகாது!!