மொத்தம் 6 பிராந்தியங்கள்... கொத்தாக பல ஆயிரம் மக்கள் சிகிச்சையில்: பகீர் கிளப்பும் சம்பவம்
ஈராக்கில் மணல் புயல் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் 5,000க்கும் மேற்பட்டோர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் ஒரே மாதத்தில் மட்டும் 7வது முறையாக மணல் புயல் தாக்கி இயல்பு வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 18 பிராந்தியங்களில் 6ல் மணல் புயல் தாக்கியுள்ளது.
ஈராக் முழுவதும் வீசிய புயலால், தலைநகர் பாக்தாத் புனித நகரமான நஜாப் ஆகியவை ஆரஞ்சு நிற மேகங்களால் மூடியது. சமீபத்திய ஆண்டுகளில் ஈராக்கில் புழுதிப் புயல் வியத்தகு அளவில் அதிகரித்திருக்கிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மட்டும் பாக்தாதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 6 பிராந்தியங்களில் மொத்தம் 5,000 மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு என அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், முதியவர்கள் இருதயம் தொடர்பான பிரச்சனைகளால் சிகிச்சை நாடியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
புழுதி மற்றும் மணல் புயல்கள் மத்திய கிழக்கில் எப்போதும் காணப்படுவது வழக்கம். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி ஏற்படுவதுடன் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-அன்பார் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் 700-க்கும் மேற்பட்டோர் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சிகிச்சையை நாடியுள்ளனர். மத்திய மாகாணமான சலாஹெதினில் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது,
அதே நேரத்தில் திவானியா மற்றும் பாக்தாத்தின் தெற்கில் உள்ள நஜாஃப் மாகாணத்தில் சுமார் 100 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில், அடுத்த பத்தாண்டுகளில் ஈராக் மக்கள் வருடத்திற்கு 272 நாட்கள் புழுதி புயலையை சந்திக்க நேரிடும் என்று அரசு அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.