Velachery: 15 அடி பள்ளத்தில் 5 நாள்களாக தேடப்பட்டு வந்த இரண்டு பேரின் உடல்களும் மீட்பு
சென்னை வேளச்சேரியில் ராட்சத பள்ளத்தில் விழுந்த இரண்டு தொழிலாளர்களின் உடல் 5 நாள்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது.
பள்ளத்தில் விழுந்த தொழிலாளர்கள்
சென்னை கிண்டி 5 பர்லாங் சாலை - வேளச்சேரி சாலை இணைப்பில் கட்டுமான பணிக்காக தனியார் நிறுவனம் சார்பில் 50 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இதில், பணி செய்வதற்கு ஏதுவாக தொழிலாளர்கள் தங்குவதற்கு கேரவன் போன்ற கன்டெய்னர் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பள்ளத்தின் பக்கவாட்டில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது, பள்ளத்திற்கு அருகே இருந்த பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறை, தொழிலாளர்கள் தங்கும் கன்டெய்னர் வாகனம் ஆகியவை சரிந்து விழுந்தன. இந்த பள்ளத்தில், சைட் இன்ஜினீயர் ஜெயசீலன் (29), பெட்ரோல் பங்க்கின் ஜெனரேட்டர் அறையில் இருந்த நரேஷ் (24) உட்பட 5 ஊழியர்கள் உள்ளே விழுந்தனர்.
தொழிலாளர்களின் நிலை
அப்போது, பொலிஸார் விரைந்து வந்து 5 பேரில், 3 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஜெயசீலன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனையடுத்து, என்எல்சி நிறுவனத்திடம் இருந்து ராட்சத பம்ப் வரவைக்கப்பட்டு தண்ணீரை வடியவைக்கும் பணி நடைபெறுகிறது. 4-வது நாளாக தொடரும் பணியில் நரேஷின் உடல் இன்று காலை (டிச.8) மீட்கப்பட்டது.
மற்றொருவரான ஜெயசீலனை தேடும் பணி நடைபெற்று வந்தது. இதில், ஜெயசீலனுக்கு திருமணமாகி 11 மாதங்களே ஆன நிலையில், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
அழுதபடியே கண்ணீருடன் அவரது மனைவி மஞ்சு கூறுகையில், "கடந்த 4-ம் திகதி கனமழையின் போது நிறுவனத்திடம் இருந்து கணவருக்கு போன் வந்தது. நாங்கள் போக வேண்டாம் என்று கூறினோம். ஜெனரேட்டரை இயக்கி, மழை நீரை அகற்றாவிட்டால் ரூ.2.50 கோடி இழப்பீடு ஏற்படும் என்று கூறிவிட்டு சென்றார். நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரிலேயே அவர் சென்றார் " என கூறினார்.
தொடர்ந்து மீட்கும் பணியில் சென்னை பொலிஸார், தீயணைப்பு படையினர், மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித் துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர் .
இந்நிலையில், காலை நரேஷின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஜெயசீலனின் உடலும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கட்டுமான நிறுவனத்துக்கும், தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமுகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதனை அமைச்சர் தரப்பு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |