வெனிசுலா நிலநடுக்கம்: 8 நாட்களுக்கு பிறகு நடந்த அதிசயம்
வெனிசுலா நிலநடுக்கம் ஏற்பட்டு 8 நாட்களுக்கு பிறகு ஒரு அதிசயிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
வெனிசுலாவின் லா குவாய்ரா நகரில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்திற்குப் பிறகு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஹெர்னான் அல்பெர்டோ கில் ஃப்ளோரஸ் (44) என்பவரை மீட்புக் குழுவினர் எட்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் வெளியே கொண்டு வந்தனர்.
அவர் சிதைந்துபோன ஒரு ஒன்பது மாடி கட்டிடத்தின் 29 அடி உயர இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தார்.

சில்லி தீயணைப்பு படையினர், கோஸ்டா ரிகா ரெட் கிராஸ் மற்றும் பல நாடுகளின் மீட்புக் குழுக்கள் இணைந்து 70 மணி நேரம் போராடி அவரை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர்.
மீட்புக் குழுவினர், சிறிய குழாய்கள் மூலம் தண்ணீர், உணவு, மருந்துகளை வழங்கி அவரை உயிருடன் வைத்திருந்தனர்.
வீடியோவில், இடிபாடுகளுக்குள் இருந்து அவர் கை அசைத்துக் கொண்டிருப்பது, பின்னர் முகம் மற்றும் தோள்கள் வெளிப்பட்டிருப்பது காணப்பட்டது.
அவரது மனைவி, “அவர் உயிருடன் இருப்பது எனக்கு சூரிய ஒளி போல. குழந்தைகள் அவருக்காக காத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த மீட்பு “அதிசயம்” என ஐ.நா. பேரிடர் மதிப்பீட்டு குழு குறிப்பிட்டுள்ளது. பொதுவாக நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நாட்களுக்குள் உயிர் பிழைப்பது சாத்தியம். ஆனால் எட்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அரிதான சம்பவமாகும்.
இந்நிலையில், வெனிசுலாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,295-ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |