வெனிசுலா நிலநடுக்கம்... மீட்புப் பணிகளில் அலட்சியம்: மக்கள் கோபம்
இயற்கைச் சீற்றங்களுக்கு நாம் யாரையும் குறை சொல்லமுடியாது என்பது உண்மைதான். ஆனால், அரசு மீட்பு நடவடிக்கைகளை தாமதித்ததால் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்னும் விடயம் வெனிசுலா மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நிலநடுக்கம்...
கடந்த புதன் கிழமையன்று வெனிசுலாவை தாக்கிய இரட்டை நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதே தவிர, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற எண்ணிக்கை தோராயமாகக் கூட வெளியிடப்படவில்லை.

காரணம், இன்னமும் பல கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன, கட்டிட இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளார்கள், அவர்களில் எத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
மீட்புப் பணிகளில் அலட்சியம்
விடயம் என்னவென்றால், நிலநடுக்கம் நிகழ்ந்தது புதன்கிழமையன்று. ஆனால், முதல் மீட்புக் குழுவினர் வந்ததே வெள்ளிக்கிழமைதான், அதாவது, இரண்டு நாட்கள் கழித்துத்தான் அவர்கள் வந்தார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன என்கிறார் Juan Avendo (60).

Juan, வெனிசுலாவிலுள்ள La Guaira என்னும் நகரில் வாழ்பவர். நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் La Guairaவும் ஒன்று.
மோசமான தகவல் என்னவென்றால், மீட்புக் குழுவினர் இன்னமும் பல இடங்களைச் சென்றடையவே இல்லையாம்.
ஆக, அதிகாரிகள் உதவிக்கு வராததால், பொதுமக்களே கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி தங்கள் அன்பிற்குரியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள், சிலரை மீட்டும் உள்ளார்கள்.
மக்கள் கோபம்
அதிகாரிகள் உடனடியாக உதவிக்கு வராததால் பொதுமக்கள் பலர் கோபமடைந்துள்ளார்கள்.
தங்கள் அன்பிற்குரியவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியாமல், நாட்கள் கடந்து செல்லச் செல்ல, இனி அவர்களை உயிருடன் பார்க்கமுடியுமா என்னும் ஆதங்கமும் சேர்ந்துகொள்ள, அரசின் அலட்சியம் குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பெற்றோருக்குப் பிறகுதான் பிள்ளைகள் மரனமடையவேண்டும் என்பது இயற்கையின் விதி. ஆகவே, நம்பிக்கை இழக்காமல் என் மகன் மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறேன் என்கிறார் Miguel Oscar.

தனியாக தன் இரண்டு பிள்ளைகளான Greydelys (12) மற்றும் Graybelys (13) ஆகியோரை வளர்த்துவரும் Deilisbeth Herreira, தன் பிள்ளைகளைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறியிறங்கி வருகிறார்.

என் பிள்ளைகள் பொதுவாக வீட்டை விட்டு வெளியே போகமாட்டார்கள். ஆனால், ஒருவேளை அவர்கள் வெளியே விளையாடச் சென்றிருந்தால் உயிர் தப்பியிருக்கக்கூடும். ஆகவே அவர்கள் எங்காவது விளையாடச் சென்று உயிர் தப்பியிருக்கமாட்டார்களா என தேடிவருகிறேன் என்கிறார் Deilisbeth.
இவர்கள் எல்லோருக்குமே தங்கள் அன்பிற்குரியவர்களைக் காணாத சோகமும் கவலையும் ஒரு பக்கம் என்றால், அரசு அதிகாரிகள் அவர்களை மீட்க உடனடியாக உதவவில்லையே என்னும் கோபம் மறுபக்கம் இருக்கிறது.
நிலநடுக்கம் நிகழ்ந்து இத்தனை நாட்கள் ஆனபின், இன்னமும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும், அவர்கள் உயிருடன் கிடைத்துவிடமாட்டார்களா என்னும் ஏக்கத்துடன் அவர்களுடைய குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |