உலகிலேயே இந்த நாட்டில் குடியுரிமை பெறுவதுதான் மிகவும் கடினம்: நடைமுறையை எளிதாக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உலகிலேயே சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதுதான் மிகவும் கடினம் என்று கூறியுள்ளது சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு (Swiss Observatory for Asylum and Foreigners Law).
உலகிலேயே, சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்குத்தான் மிகவும் கடினமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. 2018ஆம் ஆண்டு, அந்த நடைமுறையை மேலும் கடினமாக்கியது சுவிட்சர்லாந்து. அதன்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர், சுவிஸ் நிரந்தர வாழிட அனுமதி (C residence permit) வைத்திருப்பதுடன், தாங்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதை நிரூபிக்கவேண்டும், மேலும், மொழித்தேர்வு ஒன்றையும் அவர்கள் எழுதவேண்டும்.
சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு, செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இப்படிப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், மக்களில் ஒரு பெரிய கூட்டத்தார், அவர்கள் சுவிட்சர்லாந்திலேயே பிறந்துள்ள அல்லது வளர்ந்த நிலையிலும், குடியரசில் பங்கேற்பதிலிருந்து அவர்களை தடுப்பதாக தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழ்வோரில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேரிடம் இன்னமும் சுவிஸ் பாஸ்போர்ட் இல்லை. அத்துடன், குடியுரிமை பெறுவோர் வீதமும் சுமார் 2 சதவிகிதமாகவே உள்ளது என்கிறது அந்த அமைப்பு.
’சுவிட்சர்லாந்தில் இன்னமும் சில உள்ளூர் சட்டமன்றங்களில் குடியுரிமை வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்புகள் நடக்கின்றன. அதுபோக, குடியுரிமை பெறுவதற்கான நடைமுறை மிகவும் சிக்கலான ஒன்றாகவும், நீண்ட காலம் பிடிப்பதாகவும் உள்ளது. அத்துடன், அதற்கான செலவும் அதிகம்’ என்கிறார் சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநரான Noémi Weber.
மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை சுவிஸ் குடியுரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. 2018இல் அந்த சட்டம் வந்த நிலையில், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அப்போது 44,100 ஆக இருந்தது. அதுவே, 2021இல் 25,600 ஆக குறைந்துவிட்டது.
ஒரு போக்குவரத்து மீறல், அல்லது பாரம்பரிய சுவிஸ் இசைக்கருவியான Alphorn என்னும் இசைக்கருவியின் பெயரை சரியாக கணிக்காதது ஆகிய விடயங்களுக்காகக் கூட சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வது என்றால் என்ன என்பதற்கான சரியான புரிதல், மாகாணத்துக்கு மாகாணம், நகராட்சிக்கு நகராட்சி மாறுபடுகிறது என்கிறார், பேசல் பல்கலைக்கழக சட்டத்துறை நிபுணரான Barbara von Rütte.
எனவே, இரண்டாம் தலைமுறை சுவிஸ் மக்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்குதல், சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குதல் முதலான பல பரிந்துரைகளை சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு முன்வைத்துள்ளது.
குடியுரிமை வழங்குவதற்கான நேர்காணல்களை நடத்துவதற்காக சிறப்பு அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்றும், குடியுரிமை வழங்குவது தொடர்பாக உள்ளூர் சட்டமன்றங்கள் வாக்கெடுப்பு நடத்துவதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.